டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மகாபஞ்சாயத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர். ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கில் சிறைகாவலில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள யதி நரசிங்கானந்த், முஸ்லீம் ஒருவர் பிரதமரானால் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்ய அச்சுறுத்தல் இருப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், வெறுப்பு பேச்சு தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. அதில், யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, சுதர்சன் நியூஸின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சவுஹான்கே உள்ளிட்ட சில பேச்சாளர்கள் இரு சமூகத்தினரிடையே நல்லிணக்கம், பகைமை, வெறுப்பை ஏற்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை Save India அறக்கட்டளையின் நிறுவனரும், கடந்தாண்டு ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான ப்ரீத் சிங் ஏற்பாடு செய்தார். அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட சிங் தற்போது ஜாமீனில் உள்ளார். அவரது ட்விட்டர் கணக்கின்படி, ஞாயிற்றுக்கிழமை மகாபஞ்சாயத்து நிகழ்வு இந்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டது.
கடந்த டிசம்பரில் ஹரித்வாரில் நடைபெற்ற மூன்று நாள் ‘தரம் சன்சாத்’ நிகழ்ச்சியில் காசியாபாத் தஸ்னா தேவி கோவிலின் தலைமைப் பூசாரி நரசிங்கானந்த் வெறுப்பு பேச்சு பேசிய வழக்கில், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரது ஜாமீன் நிபந்தனையில், சமூகங்களுக்கிடையில் வேறுபாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட” எந்தவொரு நிகழ்விலும் அல்லது கூட்டத்திலும் பங்கேற்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியின் புராரி மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘இந்து மகாபஞ்சாயத்தில்’ சுமார் 500 பேர் கூடியிருந்தனர்.
அங்கு பேசிய யதி நரசிங்கானந்த், ” அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், 50 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாத்துக்கு கட்டாயம் மதமாற்றம் செய்யப்படுவர். 40சதவீத ஹிந்துக்கள் கொல்லப்படுவர். இதுதான் இந்துக்களின் எதிர்காலம். இது நடக்கக் கூடாது என்றால், ஹிந்துக்கள் அனைவரும் கையில் ஆயுதம் வைத்திருக்க வேண்டும்” என்றார்.
மகாபஞ்சாயத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு நிகழ்ச்சியை நடத்த அனுமதி இல்லை என்று டெல்லி போலீசார் கூறியபோதும், கூட்டம் தடுத்து நிறுத்தப்படவில்லை.
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நிகழ்ச்சியின் அனைத்து வீடியோவையும் பார்த்து வருகிறோம். சில வீடியோக்கள் நிகழ்வின் போது டெல்லி காவல்துறையால் எடுக்கப்பட்டது. சட்ட ஆலோசனைக்குப் பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய நரசிங்கானந்த், இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற வேண்டும் . அவர்களுக்கு சண்டையிட கற்றுக்கொடுக்க வேண்டும். இந்துக்களும் முஸ்லீம்களும் சண்டையிடக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பாருங்கள். காஷ்மீர் மக்கள் தங்கள் நிலத்தையும், மகள்களையும், சொத்துக்களையும் விட்டு வெளியேறுவது போல், நீங்கள் தப்பித்து இந்தியப் பெருங்கடலில் மூழ்க வேண்டும். இது மட்டுமே உங்களிடம் இருக்கும் ஒரே விருப்பம் என்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுதர்சன் செய்தியின் பிரதம ஆசிரியர் சுரேஷ் சவாங்கே பேசுகையில், நான் சிவாஜியை என் மூதாதையனாகக் கருதுகிறேன், நீ ஔரங்கசீப்பை உன்னுடையவனாகக் கருதுகிறாய். நான் ஒரு ராம சந்திரனை வணங்குபவன், நீ பாபரின் மகன். எனக்கு காசியில் ஷிவ் மந்திர் வேண்டும், நீங்கள் ஞானவாபி மசூதிக்காக போராடுகிறீர்கள்.. இதில் சமத்துவம் கிடைக்குமா? அனைவருக்கும் சம உரிமை அல்ல என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜந்தர் மந்தர் வழக்கில் மற்றொரு குற்றவாளியான பிங்கி சவுத்ரியும் மேடையில் இருந்தார். ஆனால், அவர் பேசவில்லை.
இந்த நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர், பார்வையாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர்களின் புகார்களின் அடிப்படையில் மானபங்கம் செய்தல், காயப்படுத்துதல் மற்றும் அபகரிப்பு முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 15 அன்று, ஹரித்வார் போலீசார் நரசிங்கானந்தை மூன்று எஃப்ஐஆர்களின் அடிப்படையில் கைது செய்தனர். பிப்ரவரி 8 அன்று, வெறுப்பு பேச்சு வழக்கில் ஹரித்வார் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
source https://tamil.indianexpress.com/india/yati-narsinghanand-tells-hindus-to-take-up-arms-435498/