28 4 2022 மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்று புதன்கிழமை தெரிவித்த பிரதமர் மோடி, உலக நெருக்கடியான இந்நேரத்தில் அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஒரு குழுவாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று, சட்டப்பேரவையில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை தமிழக அரசு குறைத்தது . 8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாநில அரசுகளை குற்றம் சாட்டுவதா? பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும் என தெரிவித்தார்.
எரிபொருள்கள் மீதான வரி பிரச்சினை விஷவரூபம் எடுத்துள்ள நிலையில், மாநிலங்களில் உண்மையாகவே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.
இந்தியன் ஆயில் தரவுகளின்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 56.32 ரூபாய் ஆகும். அத்துடன் சரக்கு போக்குவரத்துக் கட்டணமாக லிட்டருக்கு 0.20 ரூபாய் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 56.52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பிராசஸை தொடர்ந்து தான், மத்திய, மாநில அரசுகளின் வரி விதிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல், 105.41 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிது. அதாவது, ஒரு லிட்டருக்கு 45.03 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது.
போக்குவரத்து தொலைவு மற்றும் மாநில அரசுகள் வசூலிக்கும் வரி அடிப்படையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, ஒவ்வொரு மாநிலங்களிடையே மாறுபடுகிறது.
தமிழ்நாட்டில் வரி எவ்வளவு?
தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதில், 48.6 ரூபாய் பொதுமக்கள் வரியாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் செலுத்துகின்றனர்.
அதிக வரி வசூலிக்கும் மாநிலங்கள் எவை?
மகாராஷ்டிராவில் தான் அதிகப்பட்சமாக 52.5 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, ஆந்திராவில் 52.4 ரூபாயும், தெலங்கானாவில் 51.6 ரூபாயும் வரியாக வசூலிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில், கேரளா 50.2 ரூபாய் வரியும், மேற்கு வங்கம் 48.7 ரூபாய் வரியும், கர்நாடகா 48.1 ரூபாய் வரியும், ஜம்மு காஷ்மீர் 45.9 ரூபாய் வரியும் உத்தரப் பிரதேசம் 45.2 ரூபாய் வரியும், பஞ்சாப் 44.6 ரூபாய் வரியும், குஜராத் 44.5 ரூபாய் வரியும் வசூலிக்கிறது.
source https://tamil.indianexpress.com/india/how-much-tax-pay-for-petrol-in-each-states-446972/