வெள்ளி, 22 ஏப்ரல், 2022

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

 22 4 2022 

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார். விமான நிலையத்தில் அவரை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அத்துடன் பல்வேறு கலைக்குழுவினர் விமான நிலையத்தில் பாரம்பரிய நடனம் ஆடியும், இசைக்கருவிகளை இசைத்தும் போரிஸ் ஜான்சனுக்கு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் காந்தி ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், காந்தியடிகளின் ராட்டினத்தில் நூல் நூற்றார். பின்னர், அகமதாபாத்தில் இந்திய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வந்த, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி வரவேற்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன், இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். இந்தியா – இங்கிலாந்து இடையே தற்போது உள்ள உறவு முன்னெப்பதும் இருந்ததில்லை என குறிப்பிட்ட அவர், தற்போது இருநாடுகள் இடையேயான உறவு வலுவானதாகவும், சிறப்பானதாகவும் உள்ளது என கூறினார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதாகவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.


இதனை தொடர்ந்து, டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்திற்கு சென்ற போரிஸ் ஜான்சன், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

source 

https://news7tamil.live/delhi-offered-a-warm-welcome-to-briain-president-borris-jhonson-with-red-carpet.html