திங்கள், 25 ஏப்ரல், 2022

கோவை போக்குவரத்து இணை ஆணையர் காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ரூ.28 லட்சத்திற்கு மேல் பறிமுதல்

 

 Rs.28 lakh seized in Vigilance raid from Kovai Transport joint commissioner car: கோவை போக்குவரத்து இணை ஆணையர் காரில் இருந்து ரூ.28 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில், இணை ஆணையராக உமாசக்தி பணியாற்றி வந்தார். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்தநிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், போக்குவரத்து பயிற்சி மைய உரிமையாளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் மாதாந்திர வசூலை உமாசக்தி வாங்குவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யாவுக்கு தகவல் கிடைத்தது. 

மேலும், இணை ஆணையர் உமாசக்தி இன்று பகல் 11 மணியளவில் பல்வேறு நபர்களிடம் இருந்து லஞ்சப்பணத்தை வசூலித்துக்கொண்டு கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா வீதி வழியாக காரில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, லஞ்சஒழிப்பு போலீஸ் தனிப்படையினர் அங்கு சென்று அவரது காரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனால் இணை கமிஷனர் உமாசக்தி அதிர்ச்சி அடைந்தார். அவரது காருக்குள் லட்சக்கணக்கான பணக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பின்னர், காருடன் உமாசக்தியை வட்டார போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.

இணை ஆணையரின் காரில் மொத்தம் ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் இருந்தது. மேலும் உமாசக்திக்கு லஞ்சப்பணத்தை பெற்றுக்கொடுக்கும் உதவியாளராக ஓய்வு பெற்ற உதவியாளர் செல்வராஜ் என்பவரும் காரில் இருந்துள்ளார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரித்து வருகிறார். 

ஏற்கனவே சென்னை போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி சுமார் ரூ.35 லட்சத்தை கைப்பற்றிய நிலையில், தற்போது கோவை இணை ஆணையர் காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/rs-28-lakh-seized-in-vigilance-raid-from-kovai-transport-joint-commissioner-car-444970/