உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக அமெரிக்கா, ஐரோப்பாவின் மருத்துவ சப்ளை செயின் பாதிக்கப்பட்டுள்ளதால், மாஸ்கோவின் வணிகக் குழுவான பிசினஸ் ரஷ்யா அமைப்பு, மருத்துவ உபகரணங்களை வாங்கிட இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. செயற்கை சாதனங்கள், எக்ஸ்ரே, ஈசிஜி, MRI இயந்திரங்கள், அறுவை சிகிச்சை ஊசிகள், கருவிகள், கையுறைகள் போன்றவை கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய, ரஷ்ய பங்குதாரர்கள் மற்றும் வர்த்தக அமைச்சகம் இடையேயான சந்திப்பு ஏப்ரல் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான வணிக தூதர் ஓல்கா குலிகோவா, மாஸ்கோவில் இருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, ரஷ்யா எதிர்ப்பார்க்கும் எட்டு மருத்துவ சாதன பிரிவுகளில் பல் மருத்துவ சாதணங்கள், மருத்துவ தளபாடங்கள் மற்றும் அழகுசாதன கருவிகளும் இடம்பெற்றுள்ளன என்றார்.
தென் கொரியாவிலிருந்து அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகுசாதன உபகரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா மாறியுள்ளது. ஆனால் உக்ரைனின் படையெடுப்பு அந்த வர்த்தகத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
ரஷ்யா தனது மருத்துவ உபகரணங்களில் கணிசமான பங்கை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஆண்டுக்கு $1.6 பில்லியன் மதிப்பிலான உபகரணங்களை வாங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பேசிய குலிகோவா, ரஷ்யாவில் இன்னும் பெரும்பாலான மருத்துவ சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. மருத்துவ சாதனங்கள் தடைகளின் பட்டியலில் இல்லை என்றாலும், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனியில் உள்ள கூட்டாளர்களிடமிருந்து வரும் பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளன.எதிர்கால நிலைமையை கணிக்க முடியாதது. தற்போது, ரஷ்ய சந்தையில் திறக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பின் மீது இந்தியா கவனம் செலுத்தும் என நம்புகிறோம்.
ரஷ்யாவிடம் முக்கியமான மருத்துவ சாதனங்கள் போதுமானதாக உள்ளன. ஆனால், மேற்கத்திய நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள், உள்வைப்புகள் அல்லது சாதனங்களை புதிதாக இறக்குமதி செய்வது சாத்தியமில்லை. எனவே, எலும்பியல் உள்வைப்புகள் , சிரிஞ்ச்கள் போன்ற பல வகை மருத்துவ சாதனங்களுக்கான உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தியாவை ரஷ்யா எதிர்பார்க்கிறது என தெரிவித்தார்.
இம்மாத தொடக்கத்தில், பிசினஸ் ரஷ்யா கவுன்சில் மற்றும் அசோசியேஷன் ஆஃப் இந்தியன் மெடிக்கல் டிவைஸ் இண்டஸ்ட்ரி (AiMeD) ஆகியவை இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. சுமார் 100 பதிவு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சாதன உற்பத்தியாளர்களின் பட்டியலை மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் EAEU (Eurasian Economic Union) ஆகியவற்றில் இந்திய மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பதிவு செய்வதும், மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களின் மாதிரி மற்றும் சோதனை, ஆவணங்கள் மற்றும் மொழிபெயர்ப்பிற்கு தேவையான செயல்முறைகள் ஆகியவை வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்பட், மேற்கில் இருந்து ரஷ்யாவிற்கு அத்தியாவசிய மருத்துவ சாதனங்களின் ஏற்றுமதி ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போர் தொடங்கியபோது இருந்த நிலைமையை காட்டிலும், தற்போது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்கான மருத்துவ சாதனங்கள் கிடைத்து வருகின்றன.
மருத்துவ சாதனங்களுக்கும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கும் பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், போரினால் ஏற்பட்ட போக்குவரத்து, காப்பீடு, சுங்கத் தடைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் ரஷ்யாவின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/russia-looks-at-indian-medical-gear-445034/