சனி, 30 ஏப்ரல், 2022

இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றம் தீர்மானம்

 29 4 2022 

இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவ மத்திய அரசின் அனுமதி கோரி முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரும் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை அனுப்பி வைக்க அனுமதி தர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து மக்களுக்கும் உதவிட அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கை மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருவதோடு, உலக நாடுகள் அவர்களை அனுதாபத்துடன் பார்க்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானம் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தமிழர்கள் மனித நேய உலகில் உயர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும், இலங்கைக்கு நிவாரண உதவியாக நான் சார்ந்த குடும்பம் சார்பாக, ரூ.50 லட்சம் நிதியை அளிக்கிறேன் என்று கூறினார்.

பின்னர், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் முதற்கட்ட உதவி. இலங்கை மக்களுக்கு உதவ எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், எதிர்கட்சி துணைத்தலைவர் ரூ.50 லட்சம் தருவாதக தெரிவித்து இருப்பதோடு, மற்றவர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா இலங்கை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை சார்ந்தே இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்து விட்டது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அங்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு, பால், டீ உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு, பால் பவுடர் உள்பட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதனால் அங்கு மக்கள் கடந்த 21 நாட்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஐ.எம்.எப். போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது. பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதுடன் சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவியும் செய்துள்ளது. தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/seperate-resolution-passed-in-tamilnadu-assembly-447434/