22 4 2022 மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்வெட்டு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கோடைகாலத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடை ஏற்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன எனக்கூறிய அவர், தடையில்லா மின்சாரம் கொடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் நுகர்வு அதிகரித்துள்ளதால், குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 796 மெகாவாட் அளவுக்கு திடீரென தடை ஏற்பட்டுள்ளது எனக்கூறிய அவர் மின் தடை ஏற்படும்போது உடனடியாக சரிசெய்ய முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கூறினார்.
மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்டது என்றும், நாளொன்றுக்கு 78 ஆயிரம் டன் நிலக்கரி தேவை இருந்தும், குறைவான அளவிலேயே மத்திய அரசு வழங்கி வருவதாக சுட்டிக்காட்டினார். ஏப்ரல், மே மாதங்களுக்கு தேவையான 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் இறக்குமதி நிலக்கரியை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.
குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையை காரணம் காட்டி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நம்முடைய மின் தேவையை நாமே பூர்த்தி செய்யும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கையை எடுத்துள்ளார் என குறிப்பிட்ட அவர்,தொழிற்சாலைகளுக்கு எந்த சூழலிலும் மின்தடை ஏற்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார்.
source https://news7tamil.live/why-is-there-a-power-outage-in-tamil-nadu-minister-senthilbalaji.html