27 4 2022 சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில், கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டாவது டவரின் பின்புறமுள்ள கல்லீரல் சிகிச்சைப் பிரிவில், தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து, கல்லீரல் சிகிச்சை பிரிவில் ஆக்ஸீஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் நடந்துள்ளது. தீ விபத்து காரணமாக, ஏற்பட்ட அதைக புகையால் கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளை மீட்கும் பணி சிக்கல் ஏற்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்தும் அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து நோயாளிகளை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது. இதனால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அருகில் இருக்கும் கட்டங்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், தீயணைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்ததும் அங்கே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடக செய்தியாளர்கள், அங்கே தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சிக்கியிருந்த நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
source https://tamil.indianexpress.com/tamilnadu/fire-breaks-out-at-chennais-rajiv-gandhi-government-hospital-446564/