விருதுநகரில் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர் காந்தி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியங்கள் அமைக்கவும், ஆடைப் பூங்காக்கள் அமைக்கவும் மத்திய அரசு ரூ.4,445 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் ஏழு இடங்களில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பிராந்தியங்கள், ஆடைப் பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு, மத்திய வணிகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்துப் பேசினார். அப்போது’ தமிழகத்தில், மதுரை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில், 1,௦52 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அங்கு ஒருங்கிணைந்த மெகா ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அவரும் அதற்கான ஒப்புதலை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ஜவுளிப் பூங்காவை அமைப்பது குறித்து மத்திய ஜவுளித் துறை திட்ட இயக்குநா் அனில்குமார், வா்த்தக ஆலோசகா் சுப்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினா், ஏப்.11, 12 தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்நிலையில், விருதுநகரில் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர் காந்தி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இது பிரதமர் மித்ரா திட்டத்தின் கீழ், இந்திய ஜவுளித் தொழிலை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் மெகா ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான முன்மொழிவை மாநில அரசு சமர்ப்பித்துள்ளது.
2027-2028 வரையிலான ஏழு ஆண்டுகளில், ரூ.30 கோடி நிர்வாகச் செலவுகள் உட்பட, ரூ.4,445 கோடி பட்ஜெட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
இதுத் தவிர, தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் (நிப்ட்) சென்னை மற்றும் பெங்களூரு மூலமாக 500 புதிய டிசைன்கள் உருவாக்கப்படும். ரூ.50 லட்சம் செலவில் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்.ஐ.டி.), அகமதாபாத் மூலம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 50 வடிவமைப்பாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்.
காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலையின் உட்கட்டமைப்புகள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு கைத்தறி அங்கீகார அமைப்பு ரூ.1 கோடி செலவில் புதிதாக ஏற்படுத்தப்படும்.
ரூ.10 கோடி செலவில் சென்னையில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும். ரூ.10 கோடி செலவில் தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிகளை கணக்கெடுத்து புவிசார் மூலம் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
‘ஹேண்ட்லூம்ஸ் ஆப் இந்தியா’ என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடி ரூ.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். கைத்தறி தயாரிப்புகள் மின்னணுமயமாக்கி ஆவணப்படுத்தப்படும்.
ரூ.1 கோடி செலவில் சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு மற்றும் விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படும். தமிழ்நாட்டில் ஜவுளித் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்க தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆர் கார்ந்தி கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-to-establish-mega-textile-park-in-virudhunagar-district-447304/