தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவரது கான்வாய் மீது கொடி, கொடி கம்பம் ஆகியவை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆளுனரின் பாதுகாப்பு அதிகாரியும், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று, சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அப்போது வாக்குவாதம் ஏற்பட, சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.
அவர் பேசியதாவது, “இந்த அரசு பொறுத்தவர நா தெளிவா உறுதியா சொல்ல விரும்புகிறேன். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். ஆளுனர் மீது சிறு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களைக் காப்பாற்றிட, அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட, இந்த அரசுக்கு பொறுப்பிருக்கிறது. அந்த கடமையை காவல் துறை சரியாக நிறைவேற்றி வருகிறது.
அவர்கள் ஆட்சி காலத்தில் ஆளுனர் மீது கல், மூட்டை, தக்காளி ஆகியவை வீசி தாக்குதல் நடந்ததை மனிதல் வைத்துகொண்டு, தற்போது நடக்காத ஒன்றை நடந்தது போல் கூறி அரசியல் செய்யவேண்டாம். வெளிநடப்பு செய்திருந்தாலும் இந்த செய்தி அவர்களது காதுக்கு போகும் என்பதால் எதிர்க்கட்சி தலைவருக்கு, துனை தலைவரிடமும் மரியாதையுடனும், மதிப்புடனும் கேட்டு கொள்கிறேன்” என தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/governor-rn-ravi-convoy-attacked-mk-stalin-assembly-speech/