25 4 2022
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.
2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அறிமுக நிலையிலேயே இதற்கு அதிமுக, பாஜக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய அமைச்சர், 1949-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகச் சட்டம், 1991-ஆம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, துணைவேந்தரை நியமிக்க தொடர்புடைய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, 2000-ஆம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி மாநில அரசின் இசைவுடன் வேந்தரால்துணைவேந்தரானவர் நியமிக்கப்படுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேற்சொன்ன பிற மாநில பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப, தமிழ்நாடு மாநில அரசானது, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும் என கருதப்படுகிறது என்றும் தெரிவித்தார். எனவே, அரசானது, அந்த நோக்கத்திற்காக, கீழ் குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்துவதென முடிவு செய்துள்ளது என்ற அமைச்சர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் என 12 பல்கலைக் கழகங்களில் சட்டங்களை திருத்தப்படுகிறது என்று பேசினார்.
இதுபோலவே 2022 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமுன்வடிவையும் அறிமுகம் செய்தார். இதற்கு, கொமதேக, மமக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றட்ட சட்டமசோதாக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக, சட்டத்துறை மூலமாக சட்டமசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/university-amendment-bill-to-be-sent-to-the-governor-for-approval.html