20 4 2022 குறை பிரசவம் பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், இயக்குனர் பாக்யராஜ் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மக்கள் நலத்திட்டங்கள் புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நூலை தமிழக பாஜக தலைவர் வெளியிட, இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
பிரதமர் -யை விமர்சனம் செய்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்தக்கொள்ள சொல்வேன். தாய் வயிற்றில் சிசுவுக்கு 4-வது மாதம் காது உருவாகும். 5-வது மாதம வாய் உருவாகும். ஆனால் மோடியை விமர்சனம் செய்பவர்கள் 3 மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வேன். ஏனென்றால் நல்லதை இவனும் பேசமாட்டான் பிறர் பேசினாலும் காது கொடுத்து கேட்கமாட்டான். விமர்சனம் செய்பவர்களை பிரதமர் மோடி இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதில் குறைப்பிரசவம் குறித்து பாக்யராஜ் பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், குறை பிரசவம் குறித்த பேச்சு குறித்து மன்னிப்பு கோரி இயக்குனர் பாக்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இன்னைக்கு காலையில் ஒரு ஃபங்ஷனில் நான் பேசியதில், குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொன்ன வார்த்தை ரொம்ப தப்பான ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணிவிட்டது என்பதைக் கேள்விபட்டபோது எனக்கு ரொம்ப ஷாக்காக இருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கும் நான் சொன்ன குறைப்பிரசவத்துக்கும் சம்பந்தமில்லை. கிராமத்தில ஒரு மாசம் 2 மாசம் 3 மாசம் முன்னால பிறந்தவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வார்கள் இல்லையா. அவர்களிடம் எந்த குறையும் இருக்கிற மாதிரி சொல்ல மாட்டார்கள். மற்றபடி மாற்றுத் திறனாளிகளை நான் எப்பவுமே ஒரு அக்கறையுடன்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு அல்ல என்றைக்கும் நான் அப்படிதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால், நடந்ததில் நான் இப்படி சொல்லி இருக்க வேண்டும் என்று யார் தவறுதலாக நினைத்திருந்தாலும் அவர்கள் மனம் வலித்தாலும் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் பிஜேபி கிடையாது. நான் தமிழ்நாட்ல பிறந்து, தமிழ்ல படிச்சு, தமிழ் சினிமாவுக்கு வந்து தமிழ்தான் எனக்கு சோறு போட்டுக்கொண்டிருக்கிறது இன்று வரைக்கும்… இதில் என்னை அறியாமல், தமிழ் தலைவர்கள், திராவிடத் தலைவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜீவா ஆகிய தலைவர்களின் கருத்துகள்தான் என் மனதுக்குள் ஊறிப்போயிருக்கிறது. நான் எடுத்த என்னுடைய சினிமாக்களில் அந்த கருத்துகள்தான் இருக்கும். 40 வருஷத்துக்கு முன்னால கூட, என் படங்களில் திராவிட கருத்துகள்தான் வந்திருக்குமே ஒழிய, வேற மாதிரி எம்மனசுல எதுவுமே கிடையாது. தமிழ்நாடு, தமிழ் தலைவர்கள் என அவர்களை பின்பற்றும் மனசோடுதான் இருந்துகொண்டிருக்கிறேன். நான் எடுத்த படங்களில் அதுதான் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இனிமேலும், அதுதான் எதிரொலிக்கும். இதுதான் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.” என்று கூறினார்.