அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் பா.ஜ.க ட்விட்டர் அரசியல் செய்கிறது என்றும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உதயநிதியின் பேச்சு குறித்து தவறான கருத்து பரப்புவதாகவும் உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்றா சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியது தேசிய அளவில் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
அமைச்சர் உதயநிதி சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பேசியுள்ளதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சனாதானம் ஒழிக்கபட வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜரானார். அப்போது, அவர் மனுதாரர் இதற்கு முந்தைய விசாரணையில் தொழில்நுட்ப ஆட்சேபனைக்குப் பிறகு காரணத் தலைப்பில் திருத்தம் செய்ய விண்ணப்பித்துள்ளார். மனுதாரர் பேரவைச் செயலருக்குப் பதிலாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புச் செயலாளரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார் என்று கூறிய வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சுண்முகசுந்தரம் ஆகியோர் இந்த விண்ணப்பத்திற்கு எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.
இந்த வழக்கின் பேரில் பா.ஜ.க ட்விட்டர் அரசியல் செய்வதாகவும், இந்த வழக்கின் நடவடிக்கைகள் குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான கருத்துகள் பரப்பி வருவதாகவும் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
வழக்கறிஞர் வில்சன் பதில் மனுவை தாக்கல் செய்த பிறகு, உரிய ஆதாரங்களை தாக்கல் செய்வது மனுதாரரின் கடமை என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். அதே போல, அமைச்சர் உதயநிதியின் அரசியலமைப்பு உரிமைக்கு எதிராக எதையும் செய்ய நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்று அவர் வாதிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சார்பாக மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை ஆஜராகி எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
இதையடுத்து, நீதிபதி அனிதா சுமந்த் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-udhayanidhi-stalin-advocate-argues-bjp-doing-twitter-politics-annamalai-spreads-wrong-1679340