வியாழன், 9 நவம்பர், 2023

வரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! தமிழ்நாடு முழுக்க இன்று லாரிகள் ஓடாது!!

 

லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனை ஒட்டி, இன்று (நவம்பர் 9) தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் லாரிகள் ஒடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வு ரத்து, மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நவம்பர் 9ஆம் தேதி) லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனராஜ் அறிவித்துள்ளார்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் சேலம் மாவட்டத்தில் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வாகனங்களுக்கான காலாண்டு வரியை தமிழக அரசு 40 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும். இதேபோல், லாரிகள் மீது ஆன்லைன் மூலமாக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதைக் கைவிட வேண்டும். மணல் லாரி உரிமையாளர்கள் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த 3 கோரிக்கைகளை தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஏற்கெனவே சுங்கக் கட்டணம், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் லாரி தொழில் நலிவடைந்துள்ளது. எனவே, தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

எங்களது கோரிக்கைகளை முன்வைத்து, 9ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும். இந்த வேலை நிறுத்தத்தில் 6.5 லட்சம் கனரக வாகனங்கள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் இயங்காது. மாநில அரசுக்கு எங்களது கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டும் இயக்கப்படும். வேலை நிறுத்தம் செய்யப்படும் நாளில், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். வேலை நிறுத்தம் காரணமாக, ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும். லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்படும்.” எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (நவம்பர் 9) லாரிகள் இயங்காது எனத் தெரிகிறது. தமிழக அரசுக்கு எதிராக அடையாள வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட இருப்பதால், பெருமளவில் வர்த்தகம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழக அரசு லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை தவிர்க்கச் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

source https://news7tamil.live/trucks-willlll-not-run-across-tamil-nadu-today-to-protest-the-tax-hike.html

Related Posts: