திங்கள், 6 நவம்பர், 2023

காங்-ல் இணையும் அகிலேஷ் கட்சியின் மூத்த தலைவர்

 

SP UP.jpg

சமாஜ்வாதி கட்சிக்கு (SP) பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அதன் நிறுவன  உறுப்பினரும், லக்கிம்பூர் கேரியின் மூன்று முறை எம்.பி-யும், குர்மி (OBC) சமூகத்தின் உத்தரப் பிரதேச முகமான ரவி பிரகாஷ் வர்மா,  கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர உள்ளார். 

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி  கட்சி இடையேயான மோதலுக்கு மத்தியில் இந்த விவகாரம் வந்துள்ளது.  தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தை  பலனளிக்கவில்லை. இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சியின் இந்தியா கூட்டணியில்  அங்கம் வகிக்கின்றன. இதனால் இதுபோன்ற விவகாரங்கள் கூட்டணில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. 

63 வயதான வர்மா, தனது மகள் பூர்வி வர்மா (33) உடன் சமாஜ்வாடி கட்சியில் இருந்து  பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.  அகிலேஷ் யாதவ் தலைமையிலான கட்சி மக்களிடம் இருந்து விலகி, அதன் ஸ்தாபனத்திலிருந்து விலகிவிட்டதாக குற்றஞ்சாட்டினர். அதனால்  இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அவர்கள் கூறினர். மேலும் கட்சி கொள்கைகளில் இருந்து விலகி விட்டதாகவும் புகார் தெரிவித்தனர். வர்மா, பூர்வி வர்மா இருவரும் திங்கள்கிழமை காங்கிரசில் இணையவுள்ளனர். 

MBBS மருத்துவரான பூர்வி, 2019 மக்களவைத் தேர்தலில் லக்கிம்பூர் கேரி தொகுதியில் SP டிக்கெட்டில் போட்டியிட்டார், ஆனால் பாஜக தலைவர் அஜய் மிஸ்ரா தேனியிடம் தோற்றார். 

ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த வர்மா மாநிலத்தில் அறியப்பட்ட குர்மி முகம் என்பதால், சமாஜ்வாதியில் இருந்து வர்மா வெளியேறியது முக்கியத்துவம் பெறுகிறது.

அவரது தந்தை பால்கோவிந்த் வர்மா, லக்கிம்பூர் கேரியின் நான்கு முறை எம்.பி., இந்திரா காந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். 1980-ல் பால்கோவிந்த் இறந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி உஷா அதே தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், ரவி அவர்களின் அரசியல் பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டார், மூன்று முறை அந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

2014 மக்களவைத் தேர்தலில் லக்கிம்பூர் கேரி தொகுதியில் அஜய் மிஸ்ரா தேனியிடம் வர்மா தோற்கடிக்கப்பட்டார். பூர்வியும் 2019ல் இதே தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.

"அகிலேஷ் யாதவின் பணியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் சேர்ந்தேன், ஆனால் விவசாயிகள், வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றுக்காக குரல் எழுப்பும் சோசலிசத்தின் அடிப்படை மதிப்பிலிருந்து சமாஜ்வாதி கட்சி விலகிவிட்டது இப்போது வருத்தமாக இருக்கிறது" என்று பூர்வி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். 

“பொது மக்கள் விஷயங்களை மிகவும் தீவிரமாக உணர்கிறார்கள். பாஜக தலைவர்களை தரைக்கு அனுப்புவதை அவர்கள் பார்க்கிறார்கள், எங்கள் தலைவர்கள் வருவதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கட்சித் தலைமை சில இடங்கள் அல்லது மக்கள் விஷயத்தில் மட்டும் தீவிரம் காட்டுகிறதா என்பதை மக்கள் பார்க்கிறார்கள். இந்த விஷயங்கள் மக்கள் மத்தியில் கவனிக்கப்படாமல் போகாது, கட்சி விலை கொடுக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/india-rifts-widen-sp-ravi-prakash-verma-to-join-congress-1685484