மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் சேர்க்கை குறைக்கப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைய நிதியாண்டு நிறைவு பெறாத நிலையில், தேவை சார்ந்த திட்டத்தில் பணியாளர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிப்டெக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
84.8 லட்சம் தொழிலாளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 45.4 லட்சம் தொழிலாளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்பது தேவை சார்ந்து இயங்கக் கூடியதாக இருப்பதாலும், தற்போதைய நிதியாண்டு இன்னும் நிறைவு பெறாததாலும், பணியாளர்கள் சேர்ப்பதறாகான இலக்கை நிர்ணயிக்க முடியாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மாநிலம் ரீதியாக தேவைக்கேற்ப தொழிலாளர்களின் நிதிநிலையை திருத்தம் செய்து முன்மொழியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006-07-ஆம் நிதியாண்டு முதல் 2013-14-ஆம் நிதியாண்டு வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்த தொழிலாளா்கள் சோ்ப்பு மற்றும் வேலை தினங்களின் கூட்டு எண்ணிக்கை ரூ. 1,660 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2024-25-ஆம் நிதியாண்டு வரை இதன் எண்ணிக்கை ரூ. 2,923 கோடியாகும்.
இந்த திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட தினங்கள், கடந்தாண்டில் 184 கோடியில் இருந்து 154 கோடியாக குறைந்துள்ளதாகவும். மொத்தமுள்ள தொழிலாளா்களில் 6.7 கோடி போ் ஆதாா் அடிப்படையிலான பரிவா்த்தனை முறையின் கீழ் ஊதியம் பெற தகுதியற்றவா்களாக உள்ளனா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபா் 26, 2024 வரை 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் 13.1 கோடி தொழிலாளா்களின் ஆதாா் எண்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றும் மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கையில் 99.3 சதவீதமாகும். எனவே, ஆதாா் அடிப்படையிலான பரிவா்த்தனை முறையின் கீழ் இணையாத தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வங்கிக் கணக்குகளுடன் ஆதாா் இணைக்கப்படாத தொழிலாளா்களையும் விரைவில் அதில் சோ்க்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அட்டைகள் நீக்கம் மற்றும் ரத்து என்பது இந்த திட்டத்தில் தொடரும் ஒரு நடைமுறையாகும். ஆதாா் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடைமுறையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்கின்றன. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 1.02 கோடி அட்டைகளும் 2024-25 நிதியாண்டில் அக்டோபா் 26-ஆம் தேதி வரை 32.28 லட்ச அட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.86,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் ஒதுக்கப்பட்ட அதிக நிதியாகும். அதேபோல், தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியமும் 7 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/mgnregs-demand-driven-not-possible-to-fix-enrolment-targets-govt-7368497