புதன், 30 அக்டோபர், 2024

43,000-ஐ கடந்த உயிரிழப்பு!

 

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்.7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.

இதனைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. ஓராண்டு கடந்தும் இரு நாடுகளுக்கிடையே தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. மேலும் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனான், ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலும் தொடர்ந்து இந்த மூன்று நாடுகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக காஸாவின் குடியிருப்புப் பகுதிகள் மேல் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதல்களில் அதிகம் உயிரிழந்தவர்கள் குழந்தைகளும், பெண்களுமே ஆவர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஐ.நாவும் தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வரை காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“காஸா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 96 பேர் உயிரிழந்தனர். 227 பேர் காயமடைந்தனர். கடந்தாண்டு போர் தொடக்கத்திலிருந்து உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 43,020ஐக் கடந்துள்ளது. 1,01,110 பேர் காயமடைந்துள்ளனர். பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினரால் அவர்களை கண்டுபிடிக்கக் கூட முடியவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://news7tamil.live/israel-attack-over-43000-dead-in-gaza.html