சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
இதனிடையே, இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான். இந்தி திணிக்கப்படவில்லை. தமிழக மக்களிடையே, இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இந்தி மொழியை மக்கள் கற்கின்றனர்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டுள்ளது" என்று அவர் பேசினார்.
கண்டனம்
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தில் திராவிடம் என்கிற சொல் தவிர்க்கப்பட்டதற்கும், அவரது பேச்சுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 'ஆளுநரை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்' என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஆளுநரா? ஆரியநரா?, திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
இ.பி.எஸ் - கண்டனம்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது. மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! #திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்." என்று கூறியுள்ளார்.
செல்வப்பெருந்தகை கண்டனம்
ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழ்நாட்டின் கவர்னர் இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திட்டமிட்டே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. கவர்னரை திருப்தி படுத்த டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா?
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதைத் திருத்தி, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை வாசிக்காமல் விடுபட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய கீதத்திலும் 'திராவிட' என்ற வார்த்தை வருகிறதே? அதை தவிர்த்து விட்டு பாட முடியுமா? தேசிய கீதம் நாட்டிற்கு பெருமை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டிற்கு பெருமை தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் உணர வேண்டும்." என்று கூறியுள்ளார்.
டி.டி.வி தினகரன் கருத்து
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட அவமதிப்பா?
சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாத கொண்டாட்டங்கள் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தின் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” எனும் வரி விடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தற்செயல் நிகழ்வா? அல்லது திட்டமிட்டு நடைபெற்ற அவமதிப்பா? என்பது குறித்து சென்னைத் தொலைக்காட்சி நிலையம் விரிவான விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு அவமதிக்கப்பட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தையும் வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-governor-rn-ravi-speech-tamil-thaai-vazhthu-row-political-leaders-condemn-tamil-news-7337416