திங்கள், 28 அக்டோபர், 2024

வீடியோ கால் மூலமாக மோசடிகள்... நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

 பிரதமர்  நாட்டு மக்களுக்காக உரையாற்றி வரும் மான் கி பாத் நிகழ்ச்சியின் 115-வது பதிப்பில், இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியுள்ளார். குறிப்பாக, இணையம் மூலம் தொடர்பு கொண்டு மக்களை கைது செய்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்டு வருவதாக கூறிய மோடி, மக்களும் விழிப்புணர்வோடு செயலாற்றுவது அவசியம் எனக் கூறியுள்ளார்.

இணையம் வாயிலாக கைது செய்திருப்பதாக வரும் செய்திகளைக் கண்டு மக்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும், இணையம் மூலம் கைது செய்ய சட்டத்தில் அமைப்பு இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். மேலும், வீடியோ கால் மூலமாக எந்தவொரு அரசு நிறுவனமும் மக்களை தொடர்பு கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை சிபிஐ அதிகாரிகள் போலவும், போதை பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள் போலவும், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலவும் அடையாளப்படுத்திக் கொள்வதாக மோடி தெரிவித்துள்ளார். இது போன்ற சைபர் குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்ளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மோடி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். முதலில், அவ்வாறு தொடர்பு கொள்பவர்களைக் கண்டு பதற்றம் அடையாமல், அவர்களின் வீடியோ காலை ரெக்கார்ட் செய்ய முயற்சி செய்ய வேண்டுமென அவர் கூறியுள்ளார். இரண்டாவதாக, எந்த அரசு நிறுவனமும் இணையம் மூலம் தொடர்பு கொண்டு மக்களை மிரட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரியப்படுத்த மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பண்டிகை காலத்தில் ஆத்மநிர்பார் பாரத் பிரச்சாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முன்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்து மோடி விவரித்துள்ளார்.

அக்டோபர் 31-ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளும், நவம்பர் 15-ஆம் தேதி பிர்சா முன்டாவின் பிறந்தநாளும் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து பேசிய மோடி, கடந்த ஆண்டு பழங்குடியின தலைவரின் பிறப்பிடமான ஜார்கண்ட் மாநிலத்தின் உளிஹட்டு மலைக்கிராமத்திற்கு சென்றதை நினைவு கூர்ந்தார்.

இதேபோல், அக்டோபர் 28-ஆம் தேதி உலக அனிமேஷன் தினம் கொண்டாடப்படுபதைக் கூறிய மோடி, அனிமேஷன் துறையின் அதிகார மையமாக இந்தியா விளங்குவதாக கூறினார். இந்தியாவில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோக்கள் தற்போது உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்னி மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.

மெய்நகர் தொழில்நுட்பம் மூலம் சுற்றுலா விரிவடைந்து வருவதாக மோடி தெரிவித்துள்ளார். நமது இளைஞர்கள் நம் கலாசாரத்தை பிரதபலிக்கும் விதமாக கண்டெண்ட் கிரீயேஷனில் ஈடுபடுவதாக மோடி குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் அவர்களை உலகம் உற்று நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, மெய்நிகர் சுற்றுலா பிரபலமடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

source https://tamil.indianexpress.com/india/modi-mann-ki-baat-digital-arrest-cyber-fraud-7366675