மீண்டும் போர் பதற்றம்... ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதன் விளைவாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அண்மையில் போர் உருவானது. மேலும், இஸ்ரேலின் போர் நடவடிக்கையை எதிர்த்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது.
இது ஒருபுறமிருக்க, இன்று ஈரான் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இரு நாடுக்களும் இடையேயான நேரடி ராணுவ பரிமாற்றங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்காக ஈரான் ராணுவம் பதிலடி கொடுத்தால் அதற்கான விளைவுகள் என்னவாக இருக்குமென புரிந்து கொள்ளும் வகையில், இஸ்ரேலின் தாக்குதல் துல்லியமாக இருப்பதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார். இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் தலையீடுகள் இல்லையென, அந்நாட்டு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனினும், இஸ்ரேலின் தாக்குதலை ஈரானின் விமான படையினர் வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும், குறைவான அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் பதிலளித்துள்ளது. மேலும், டெக்ரான், குஸேஸ்தான், மற்றும் இலாம் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், தலைநகர் பகுதி அருகே சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மூன்று அடுக்கு தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலின் ராணுவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தங்கள் நாட்டின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய தினம் வான்வழி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது. ஈரானின் ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மறு உத்தரவு வரும் வரை அனைத்து விமான சேவைகளும் முடக்கி வைக்கப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படவில்லை என ஈரானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
26 10 24
source https://tamil.indianexpress.com/international/israel-has-started-his-attack-against-iran-7363815