வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டாணா புயலாக உருவெடுத்த நிலையில், இந்த புயல், மேற்குவங்கத்தின் பிதர்கணிகா, ஒடிசாவின் தாமரா இடையே தீவிர புயலாக நேற்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டாணா புயலாக உருவெடுத்த நிலையில், இந்த புயல், நேற்று (அக்டோபர் 24) இரவு கரையை கடந்த நிலையில்,ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. கடலோர மாவட்டங்களான பத்ரக், கேந்திரபாரா, பாலசோர் மற்றும் அருகிலுள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மணிக்கு 100 கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் திடீரென அதிகரித்து, மிகக் கனமழை பெய்தது.
இந்த புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் புவனேஸ்வர் விமான நிலையம் ஆகிய இரு விமான நிலையங்களிலும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கியது. முன்னதாக இந்த புயல் வடக்கு ஒடிசா முழுவதும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து இன்று மதியம் சூறாவளி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.
வானிலை மையம் திடீரென முன்னறிவிப்பு வெளியிட்டதால், ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் அவசர அவசரமாக செயல்பட்டன. இதில் முதற்கட்டமாக இரு மாநிலங்களிலும் உயர் எச்சரிக்கை மற்றும் ரயில் மற்றும் விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்த புயலால் இதுவரை எந்த பெரிய சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இன்று காலை கணிக்கப்பட்டுள்ள நிலவரப்படி காற்றின் வேகம் மணிக்கு 120 கிமீ வேகத்தை எட்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே ஒடிசாவில், வானிலை சீராக இருந்ததால், பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது. "வழக்கமான செயல்பாடுகள் காலை 9 மணிக்குத் தொடங்கும், ஆனால் நாங்கள் அதை காலை 8 மணிக்கு தொடங்கிவிட்டோம். சூறாவளிக்குப் பிந்தைய அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றினோம். எங்கள் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு பகுதிகள், முனையக் கட்டிடம் மற்றும் நகரப் பகுதிகளை ஆய்வு செய்து, நாங்கள் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்கினோம்," என்று புவனேஸ்வர் விமான நிலைய இயக்குனர், பிரசன்னா பிரதான் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சூறாவளியில் சிக்கிய ஒடிசாவில், சாலையில் விழுந்த மரங்களை அகற்றி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்றுடன் என்.டி.ஆர்.எஃப் (NDRF) குழுக்கள் போராடி வருகின்றன. இது குறித்து என்.டி.ஆர்.எஃப் (NDRF) இன்ஸ்பெக்டர், விக்ரம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம், "நாங்கள் பரதீப்பில், குறிப்பாக நேரு பங்களா பகுதிக்கு துறைமுக நுழைவுக்காக நிறுத்தப்பட்டுள்ளோம். நாங்கள் காலை, 4:00 மணி முதல் சாலைகளை சுத்தம் செய்கிறோம். சூறாவளி இங்கு மிதமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/cyclone-dana-updates-landfall-odisha-west-bengal-rain-forecast-imd-7353844