செவ்வாய், 29 அக்டோபர், 2024

4 மாதங்களில் ரூ. 120 கோடியை இழந்த இந்தியர்கள்... விஸ்வரூபம் எடுக்கும் 'டிஜிட்டல் கைது' மோசடி

 Digital arrest

சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் சைபர் மோசடி குற்றங்களில், டிஜிட்டல் கைது விவகாரத்தில் 4 மாதங்களில் சுமார் ரூ. 120 கோடியை இந்தியர்கள் இழந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மத்திய அளவில் சைபர் குற்றங்களை கண்காணித்து வரும் உள்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, சைபர் குற்றங்களில் டிஜிட்டல் கைது மோசடி தற்போது பிரதானமாக மாறி வருவதாக கூறியுள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பதிவான சைபர் குற்றங்களில் 46 சதவீதம் இந்த நாடுகளில் இருந்து உருவானது எனவும், இதில் சுமார் ரூ. 1,776 கோடி வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சைபர் குற்றங்கள் ரிப்போர்டிங் போர்டல் தரவுகளின் படி, கடந்த  ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 31-ஆம் தேதி வரை 7.4 லட்ச புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2023-ஆம் ஆண்டில் 15.56 லட்ச புகார்களும், 2022-ஆம் ஆண்டில் 9.66 லட்ச புகார்களும், அதற்கு முந்தைய ஆண்டில் 4.52 லட்ச புகார்களும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நான்கு பிரிவுகளாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதன்படி, டிஜிட்டல் கைது, வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி மற்றும் டேட்டிங் ஆப்-கள் மூலமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டிஜிட்டல் கைது மோசடியில் ரூ. 120.30 கோடியும், வர்த்தக மோசடியில் ரூ. 1,420.48 கோடியும், முதலீட்டு மோசடியில் ரூ. 222.58 கோடியும், டேட்டிங் ஆப் மூலம் நடந்த மோசடியில் ரூ. 13.23 கோடியும் இந்தியர்கள் இழந்துள்ளதாக சைபர் குற்றங்கள் கண்காணிப்பு துறை தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் கைது மோசடியை பொறுத்தவரை, குறிப்பிட்ட நபரை அழைத்து அவர்கள் கடத்தல் பொருள்கள், போதைப் பொருள்கள், போலி பாஸ்போர்ட்கள் உள்ளிட்டவற்றை பார்சல்களாக அனுப்பியதாகவோ அல்லது பெற்றதாக மோசடி கும்பல் கூறுவார்கள்.

சில நேரங்களில் அவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உள்ளிட்டோர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பார்கள்.

மோசடிக் கும்பல் தாங்கள் குறிவைத்துள்ள நபர்களை ஸ்கைப் அல்லது ஏதேனும் வீடியோ கால் வசதி மூலம் தொடர்பு கொண்டு, தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் போன்றோ அல்லது காவல்துறையினர் போன்று சித்தரித்து, சம்பந்தப்பட்ட வழக்கை தீர்க்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமென மிரட்டல் விடுப்பார்கள்.

இந்த வகையான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளாக்கபடுகிறார்கள். அதாவது மோசடிக்காரர்கள் கேட்ட பணத்தை கொடுக்கும் வரை வீடியோ காலில் அவர்கள் கட்டாயம் இருக்க வேண்டுமென நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்த மோசடி கும்பல், சமூக வலைதளங்கள் மூலமாக இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றும் வேலையையும் அரங்கேற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/india/indians-lost-rs-120-crore-in-digital-arrest-frauds-in-january-april-2024-7367721