இஸ்ரேலின் தாக்குதலை குறைத்து மதிப்பிடவோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்தார்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று முன்தினம் ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த தாக்குதலை மிகைப்படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தவறான கணக்கீடுகள் சீர்குலைக்கப்பட வேண்டும். ஈரானிய தேசம் மற்றும் அதன் இளைஞர்களின் வலிமை, விருப்பம் மற்றும் முன்முயற்சி என்ன என்பதை இஸ்ரேலுக்கு காட்ட வேண்டும். அதனை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் நலன்களுக்கு சேவை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாத துவக்கத்தில் லெபனானின் ஹில்புல்லா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேல் மீது 150க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வீசியது. இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். மேலும் கடந்த 7ஆம் தேதி போர் தொடங்கி ஒரு வருடம் ஆனதையடுத்து, தங்கள் நாட்டுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி, ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
ஈரானும் இந்த தாக்குதலுக்கு தயாராகி வந்தது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரானின் ராணுவ தளங்கள்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. மேலும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
source https://news7tamil.live/israeli-attack-should-neither-be-underestimated-nor-exaggerated-iran-supreme-leader-ayatollah-ali-khamenei.html