வியாழன், 24 அக்டோபர், 2024

#Wayanad இடைத்தேர்தல் | பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்!

 

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி இன்று பேரணியாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்தது.

இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி இன்று (அக்.23) பேரணியாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி உடனிருந்தனர். முன்னதாக பிரியங்கா காந்தி கல்பெட்டா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் பேரணி சென்றார். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கில் மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் கலந்துகொண்டனர்.

இந்த பேரணிக்கு இடையே பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது,

“17 வயதில் எனது தந்தைக்காக வாக்கு சேகரித்துள்ளேன். 35 ஆண்டுகளாக பலமுறை கட்சி நிர்வாகிகளுக்காக பரப்புரை செய்துள்ளேன். முதன்முறையாக இப்போது எனக்காக பரப்புரை செய்கிறேன். தேர்தலில் பரப்புரை செய்வதும், இப்போது உங்களது ஆதரவை நான் தேடுவதும் மிகவும் வித்தியாசமான உணர்வாக உள்ளது. சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட அழிவை என் கண்களால் பார்த்தேன். குடும்பத்தை இழந்த குழந்தைகளையும், குழந்தைகளை இழந்த தாய்களைப் பார்த்தேன். தனது வாழ்வையே இழந்த மக்களைப் பார்த்தேன். ஆனால், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவினர். அவர்கள் ஒருவரையொருவர் துணிச்சலுடன் ஆதரித்தனர். உங்களது சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய பாக்கியமாக இருக்கும்.”

இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

23 10 24 



source https://news7tamil.live/wayanad-by-election-priyanka-gandhi-filed-nomination.html