சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட இந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டு பாடப்பட்டதால் ஆளுநருக்கு எதிராக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.
டிடி தொலைக்காட்சி பொன் விழா கொண்டாட்டம் மற்றும் இந்தி மொழி மாத கொண்டாட்டம் விழா சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக ஆளுந்ர ஆர்.என். ரவி கலந்துகொண்டார்.
இந்த விழாவின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் இடம்பெற்றுள்ள 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்னும் வரி பாடப்படவில்லை. இது 'திராவிடம்' என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் அந்த வரி தவிர்க்கப்பட்டதாக சர்ச்சையானது.
இதனால், சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடம்’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி மீது விமர்சனங்கள் எழுந்ததால் சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து, இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “'கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க தொடர்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஹிந்தி திணிப்பு என்று கூறி தமிழக மக்களை ஹிந்தி கற்கவிடாமல் தடை செய்திருக்கின்றனர்.
தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் உலகம் முழுவதும் தமிழைக் கொண்டுசெல்ல என்ன செய்தார்கள்? தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர்.
நாட்டில் 23 மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 3-வது மொழி அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு பிரிவினைவாத நோக்கம். இந்த முயற்சியில் ஈடுபடுபவர்களால் இந்தியாவை பிரிக்க முடியாது. இந்தியாவின் பலமான ஓர் அங்கமாக தமிழகம் எப்போதும் இருக்கும்” என்று பேசினார். ஆளுநரின் இந்த பேச்சு குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழக ஆளுநர் கலந்துகொண்ட இந்தி மொழி மாதம் கொண்டாட்ட நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ‘திராவிட’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/another-controversy-against-governor-rn-ravi-dravidian-word-omitted-tamil-thaai-vaazhthu-and-national-anthem-7337660