ஞாயிறு, 20 அக்டோபர், 2024

#Manipur-ல் மீண்டும் வெடித்த வன்முறை… கிராமத்தில் தாக்குதல் நடத்திய குகி ஆயுதக்குழுவினர்!

 

19 10 2024 

மணிப்பூரில் இன்று குகி ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன.

இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன்,  இணைய சேவையும் தடை செய்யப்பட்டது. இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. இந்த சூழலில், சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் இன்று மீண்டும் அங்கு வன்முறை அரங்கேறி உள்ளது. ஜிர்பும் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏராளமான ஆயுதங்களுடன் இன்று (அக்.19) காலை உள்ளே நுழைந்த குகி ஆயுதக்குழுவினர் கிராமத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும், குண்டுகளையும் வீசியுள்ளனர்.

தாக்குதலை அறிந்த பாதுகாப்பு படையினர் பதிலடியாக, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் குகி ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதால் பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.


source https://news7tamil.live/violence-breaks-out-again-in-manipur-village-attacked-by-protestors.html