பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி பெறுவது கட்டாயம்
இலுப்பூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆர்டிஓ வடிவேல்பிரபு தலைமை வகித்தார். விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றை அச்சடிக்கும் முன்னர் காவல் துறை அனுமதிபெற வேண்டும். டிஜிட்டல் பேனர் அச்சடிக்க வருவோரிடம் அச்சடிக்க உள்ள விபரத்தை காவல் துறைக்கு அனுப்பிவைத்து, உரிய அனுமதி ஆணை பெற்று அதன் விவரத்தை டிஜிட்டல் பேனர்களில் வலது ஓரப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிட்டு அச்சடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரை கூறப்பட்டது.
மேலும், இதுதொடர்பான அறிவிப்புகளை அச்சகத்தில் உள்ள விளம்பரப் பலகையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பேரூராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனர் வைக்கும் இடங்களைத் தேர்வுசெய்து ஆர்டிஓ மற்றும் காவல் துறைக்கு அனுப்பிவைக்குமாறு செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் சமூக நலத் திட்ட தனி தாசில்தார் மனோகரன், குளத்தூர் தாசில்தார் மரகதவள்ளி, குன்றாண்டார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் தனம், ஆணையர் அமுதவள்ளி, இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, காரையூர் எஸ்ஐ முத்துகண்ணு மற்றும் அச்சக உரிமையாளர்கள், அனைத்து கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.