நரேந்திர மோடி ஆட்சியில், தொலைத்தொடர்பு துறையில் 45 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக, காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

மோடி தலைமையில் பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், முதல்முறையாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ஏர்டெல், ஏர்செல், ஐடியா, ரிலையன்ஸ், வேடோபோன் மற்றும் டாடா ஆகிய ஆறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 46 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்திருப்பதாக கூறினார்.
அரசு உரிமம் கட்டணம் செலுத்துவதில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அந்த நிறுவனங்கள் கடன் செலுத்த வேண்டியிருப்பதாகவும் கூறினார். இந்த நடவடிக்கை பாரதிய ஜனதா அரசு பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பணியாற்றுவதை எடுத்துக் காட்டுவதாக, ரன்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டினார். இந்த ஊழல் முறைகேட்டை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப இருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது