புதன், 27 ஜூலை, 2016

தெரிந்த தொழிலில் சாமர்த்தியம் வேண்டும்

சென்னை கொடுங்கையூரில் வசிக் கிறார் நந்தினி. பி.காம் முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர். அந்த நிறுவனம் நான் ஓவன் பொருட் கள் வர்த்தகத்தில் இருந்தது. வட மாநில உற்பத்தியாளர்களிடம் அந்த பொருட்களை வாங்கி சென்னையில் மார்கெட்டிங் செய்து வந்துள்ளது. அந்த பொருட்களை இங்கேயே தயாரித்தால் என்ன என்று அவர் யோசித்ததன் விளைவு இன்று தனியாக தொழிலில் இறங்கி சாதித்துள்ளார். ஸ்பா மற்றும் சலூன்களில் பயன்படுத்தும் நாப்கின், காலணி உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.
சென்னைதான் பூர்வீகம், திருவல்லிக்கேணியில் வசித்து வந்தோம். டிகிரி முடித்துவிட்டு சில நிறுவனங்களில் அக்கவுண்டன்டாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஐசிஐசிஐ வங்கியின் கடனுதவி ஏஜென்சியிலும் சில ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். திருமணத்துக்கு பிறகு எனது கணவர் வீடு அமைந்திருக்கும் கொடுங்கையூரில் செட்டிலானேன். இங்கு வந்ததும் ஒரு வர்த்தக நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நிறுவனம் மும்பை டெல்லி போன்ற நகரங்களிலிருந்து நான் ஓவன் துணியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி இங்கு மார்க்கெட்டிங் செய்து வந்தது. அதன் வரவு செலவுகளுக்காக பல நிறுவனங்களுடனும் நான் தான் பேசுவேன்.
அந்த பொருட்களின் கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்குமான வித்தியாசம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்து வாங்கி இங்கு மார்க்கெட்டிங் செய்வதற்கே இவ்வளவு லாபம் என்றால், அதை இங்கேயே தயாரித்து விற்பனை செய்தால் என்ன என யோசித்தேன். அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணிகளில் இருந்த என் தோழி நந்தினியும் இந்த யோசனைக்கு ஊக்கம் கொடுத்தார்.
நானும், நந்தினியும் மேலும் இரண்டு பெண்களுமாக அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டோம். ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு 35 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பித்தோம். முதன் முதலில் ஒரே ஒரு தையல் இயந்திரம்தான் வாங்கினோம். நான் கணக்கு மற்றும் தொடர்புகளை பார்த்துக் கொள்வது, மற்றொருவர் மார்க்கெட்டிங், இரண்டு பேர் தயாரிப்பு வேலைகள் என பம்பரமாக இயங்கினோம்.
ஸ்பா, சலூன்கள், மருத்துவமனைகள், ஸ்டார் ஹோட்டல்கள் இவர்கள் தான் எங்களது தயாரிப்புகளுக்கு முக்கிய வாடிக்கையாளர்கள். இவர்கள் ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருக்கும் சப்ளையர்களை விட விலை குறைவாக கொடுத்து புதிய ஆர்டர்களைப் பிடித்தோம். அப்படி விலை குறைவாக கொடுத்தாலும் எங்களுக்கு லாபம் இருந்தது என்பதால்தான் அப்படி செய்தோம். புதிய ஆர்டர்கள் கிடைக்க கிடைக்க உற்பத்தி அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்தது. இதற்கு கூடுதல் முதலீடு தேவைப்பட்டது. இந்த சமயத்தில் என் தொழில் பார்ட்னர்களில் இரண்டு பெண்கள் வெளியேறிவிட்டனர். இதனால் நாங்கள் இரண்டு பேர் மட்டும் முதலீட்டை அதிகரிக்க முடியாத நிலையில் சென்னையில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் வரம் கேபிடல் மூலம் ரூ.2 லட்சம் கடனுதவி கிடைத்தது.
இந்த தொகையைக் கொண்டு மேலும் இரண்டு தையல் இயந்திரங்கள் வாங்கி னோம். தவிர கொஞ்சம் பெரிய இடத்துக்கும் வாடகைக்கு வந்தோம். தொழிலை தொடங் கிய சில மாதங்களிலேயே நாங்கள் இந்த முயற்சிகளை எடுத்தோம். அதற்கடுத்து எங்களது தேவைகளுக்கு மேலும் நான்கு இயந்திரங்களை வாங்கி தொழிலை விரிவாக்கினோம் சென்னையின் இந்த பொருட்களை தயாரிக்க இரண்டு மூன்று பேர்தான் உள்ளனர் என்பதால் அடுத்த கட்டமாக தானியங்கி இயந்திரங்களோடு தொழிலை விரிவாக்க திட்டமிட்டு வரு கிறேன். தவிர மூலப் பொருளான நான் ஓவன் துணி தயாரிப்பில் ஒரு சில உற்பத்தி யாளர்களே உள்ளனர். அதை தயாரிக்கும் திட்டமும் உள்ளது. தற்போது பத்து பேர் வேலை பார்க்கின்றனர். என் கணவரும் இப்போது மார்க்கெட்டிங் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
பெண்கள் தங்களுக்கு என்ன தெரியும் என்று முடங்கிக் கொண்டிருப்பதைவிட தெரிந்த தொழிலில் சாமர்த்தியமாக முன்னேற வேண்டும். உங்களால் குடும்பம் உயருகிறது என்றால் எல்லோரும் உங்களுடன்தான் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.