தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளாக அறியப்படுகிறது.
உலகின் பெரும்பாலான மரம் மற்றும் செடி வகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள அமேசான் காட்டில் இதுவரை 11,000-த்துக்கும் மேற்பட்ட புதிய வகை மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிக்கப்படாத மரங்கள் மற்றும் செடிகள் அங்கிருக்கலாம் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவற்றையெல்லாம் அடையாளம் காண இன்னும் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான கால அவகாசம் தேவைப்படும் என்றும் கருதப்படுகிறது.
உலகின் 9 நாடுகளில் எல்லைகளுக்குள் விரிந்துள்ள அமேசான் காடுகள், 1300 வகை பறவை இனங்கள், 427 வகை பாலூட்டி இனங்கள், 2,200 மீன் இனங்கள் மற்றும் 50 ஆயிரம் வகையான தாவர வகைகளின் புகலிடமாக இருக்கிறது. அதில் 16 ஆயிரம் வகை மர வகைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த காடுகள் கடந்த 55 லட்சம் ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, புவியின் 10 சதவீத பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அமேசான் காடுகள், கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வினை பத்து சதவீத அளவுக்கு உறிஞ்சி காற்று மண்டலத்தை சுத்தமாக்குவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த காடுகளின் ஊடே ஒடும் அமேசான் நதி உலகின் பெரிய நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எல்லா காடுகளையும் போலவே மரங்களை வெட்டுவது மற்றும் வேட்டையாடுவது உள்ளிட்ட பிரச்னைகளால் அமேசான் காடுகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்