வியாழன், 28 ஜூலை, 2016

புதுகையில் 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தால் வியாபாரிகள் பீதி


புதுகை, ஜுலை.27-
புதுக்கோட்டையில் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக அவ்வப்போது குற்றத்தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். வர்த்தக நகரங்களான மதுரை, விருதுநகர், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் கள்ள நோட்டுகள் வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கூறப்பட்டது. இதனால் பொதுமக்களிடையே அச்சமும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரில் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் மக்கள் 1000 ரூபாய் நோட்டை கொடுக்கின்றனர். அதனை வியாபாரிகளும் வாங்கிக்கொண்டு பொருள் கொடக்கின்றனர். ஆனால் அந்த 1000 ரூபாய் நோட்டை மொத்த வியாபார கடைகளிலோ அல்லது வங்கிகளிலோ கொடுக்கும்போது அது கள்ளநோட்டுகள் என்று தெரிய வருகிறது. அதாவது ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கான எந்திரத்தில் வைத்தால் குறிப்பிட்ட 1000 ரூபாய் நோட்டுகளை அது எடுத்துக்கொள்வது கிடையாது. இந்த மாதிரியான கள்ளநோட்டுகள் புழக்கத்தால் வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க பொதுமக்கள் பஸ்சிலோ, கடைகளிலோ சாதாரணமாக 1000 ரூபாய் நோட்டை கொடுத்தால் அதனை வாங்க மறுக்கின்றனர். அதற்கு கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதே காரணம் என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபடும் கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் குற்றவாளிகளை நுண்ணறிவு போலீசார் விரைவில் கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது.