கேள்வி :- சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர், பியூஷ் மனுஷ் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளாரே?
வன்மையான கண்டனத்திற்கு உரிய செய்தி அது. பியூஷ் மனுஷ் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தான் செய்துவந்த கொசு வலை உற்பத்தித் தொழிற்சாலையை மூடி விட்டு, தன்னை ஒரு முழு நேரச் சூழலியல் செயற்பாட்டாளராக மாற்றிக் கொண்டார். பியூஷ் சேத்தியாவாக இருந்தவர், தன் பெயரில் இருந்த “சேத்தியா” என்ற சாதிப் பெயரை நீக்கிவிட்டு, ‘பியூஷ் மனுஷ்” என்று தன் பெயரை வைத்துக் கொண்டார். சேலம் மாநகரில் மக்களைத் திரட்டி, அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். “சேலம் மக்கள் குழு” என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார். சேலத்தில் முன்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் வேலைகள் அண்மையில் தொடங்கப்பட்ட போது, அந்தப் பகுதி மக்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. மக்களிடம் உரிய முறையில் முன்பாகவே தகவல் தெரிவித்த பிறகே பணிகள் தொடங்கப்பட வேண்டுமென்று சேலம் மக்கள் குழு ஜூலை 8ஆம் தேதி ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டு பியூஷ், கார்த்திக், முத்து ஆகியோரைக் காவல் துறை கைது செய்து நான்கு பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கிறது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பியூஷ் சிறையில் தன்னை சிறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியது குறித்து உறவினர்களுடன் கதறி இருக்கிறார். பியூஷின் வழக்கறிஞர் மாயன், “பியூஷ் கரங்களைக் கட்டி, இருட்டு அறையில் வைத்து ஏறத்தாழ முப்பது பேர் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். சாதாரண ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் மீது ஏன் இவ்வளவு வன்மம்? வினுப்பிரியா தற்கொலையைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்களை பியூஷ்தான் நடத்தினார். அதை மனதில் வைத்துக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். பியூஸ் இதுகுறித்து வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். மனித உரிமைகள் ஆணையமும் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. அரசு தரப்பில் சிறைத் துறையினரிடம் விளக்கம் கேட்டு மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இதில் உண்மை என்ன என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியும்!