திங்கள், 25 ஜூலை, 2016

வெகுஜன ஊடகங்கள் கஷ்மீரில் நடப்பது என்ன என்பதை உங்களுக்கு கூற மாட்டார்கள்: ஐ.ஏ.எஸ். அதிகாரி!

2009 சிவில் சர்விஸ் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர் கஷ்மீரை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா ஃபேசல். இவர் செய்தி தளம் ஒன்றிற்கு அனுப்பிய கடித்தத்தில் பிரபல செய்தி சானல்களாக ஜி நியுஸ், ஆஜ் தக், டைம்ஸ் நவ், நியுஸ் எக்ஸ் ஆகிய தொலைக்காட்சிகள் கஷ்மீரில் நடப்பது என்ன என்பது குறித்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கஷ்மீர் இறப்பிற்கு துக்கம் அனுசரித்து வருகிறது, ஆனால் இந்த ஊடகங்களோ இந்தியாவினால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தங்களது வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி, கஷ்மீரை இன்னும் இந்தியாவிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும் “நான் என் பணியை செய்ய ஐ.ஏ.எஸ். இல் இணைந்தேனா இல்லை பிறரது துன்பத்தில் இன்பம் காணும் உங்களது பிரச்சாரங்களுக்கு அங்கமாக சேர்ந்தேனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்த வேலையில் சேரும் போது என்னை சுற்றி இத்தகைய மடத்தனங்கள் நடந்துகொண்டிருக்கையில் என்னுடைய வாழ்க்கை முழுவதையும் மேசையை தேய்த்துக் கொண்டிருப்பேன் என்று எண்ணவில்லை” என்று கூறியுள்ளார்.
“நான் விரைவில் என் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்” என்றும் அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும் “தங்களின் சொந்த குடிமக்களையே ஒரு நாடு கொலை செய்வது மிகவும் மோசமானது” என்றும் “எந்த ஒரு அரசும் தனது குடிமக்களின் வேதனைகளில் இருந்து தங்களை தூரப்படுத்திக்கொள்ள முடியாது. தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு முடிவுகாணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு சிறிது காலம் பிடிக்கும். அதுவரை தங்கள் டி.ஆர்.பி. பசிக்காக கஷ்மீர் பள்ளத்தாக்கை நெருப்பில் இட துடிப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
இதுநாள் வரையில் தனக்கு இணைய தள இணைப்பு கிடைக்கவில்லை என்றும் தற்போது இணைப்பு வந்ததும் தான் தனது கருத்தை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த குழப்பத்தில் உயிரை இழந்தவர்களுக்கும் தங்களது பார்வைகளை இழந்தவர்களுக்கும் பிராத்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது கடித்தத்தை “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” (இறைவனிடம் இருந்தே வந்தோம், அவனிடமே திரும்பிச் செல்வோம்) என்று முடித்துள்ளார் ஷா ஃபேசல்.
நன்றி:தமிழ் நாடு முஸ்லிம் மீடியா.
https://www.facebook.com/475017615989257/photos/a.475018752655810.1073741828.475017615989257/621365134687837/?type=3&theater