புதன், 27 ஜூலை, 2016

இந்தியாவின் முதல் செய்தித் தாள்..

இந்தியாவின் முதல் செய்தித் தாள் ’பெங்கால் கெசட்’ என்ற பெயரில் 1780-ஆம் ஆண்டு ஜனவரி 29-ல் வெளியானது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் கொண்டுவரப்பட்டது. இந்திய செய்தித்தாள்களின் தந்தை என்றும் ஹிக்கி அழைக்கப்படுகிறார்.
Newspaper
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வெளியான அந்த செய்தித் தாளினை எழுதி, வடிவமைத்து ஹிக்கே வெளியிடவும் செய்தார். ஆறு பக்கங்களுடன் வெளியான பெங்கால் கெசட், 200 பிரதிகள் அளவுக்கு விற்கப்பட்டதாகப் பதிவுகள் உள்ளன.
அன்றைய காலகட்டத்தின் இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்தியக் கம்பெனி குறித்த கடுமையான விமர்சனங்களை பெங்கால் கெசட் வைத்தது. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸின் கடும் எதிர்ப்புகளை ஹிக்கி சம்பாதிக்க நேர்ந்தது. அதுமட்டுமின்றி அன்றைய காலகட்டத்தில் தலைமை நீதிபதியாக இருந்த எலிஜா இம்பே மீதும் ஹிக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பெங்கால் கெசட் செய்தித் தாளில் வெளியான செய்திகளால் ஆத்திரமுற்ற வாரன் ஹேஸ்டிங்ஸ், 1782-ஆம் ஆண்டு மார்ச்சில், செய்தித் தாளினை அச்சிட ஹிக்கி பயன்படுத்திய இயந்திரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தார். அதன்மூலம் 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்தியாவின் முதல் செய்தித்தாளின் கதை முடிவுக்கு வந்தது. ஹிக்கியின் நினைவைப் போற்றும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.