நூலின் பெயர் : கியாமத் நாளின் அடையாளங்கள்
ஆசிரியர் : சகோ: பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.
ஆசிரியர் : சகோ: பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அதிசயப் பிராணி ஒன்றை இறைவன் படைத்து மக்களிடையே அதை நடமாட விடுவான். அந்தப் பிராணியின் வடிவம் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விபரம் காணப்படாவிட்டாலும் அத்தகைய பிராணி ஒன்று யுக முடிவு நாளின் நெருக்கத்தில் தோன்றும் என்பதற்கு திருக்குர்ஆனிலும்,ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.
(அல்குர்ஆன் 27:82)
இறை வசனங்களை மக்கள் நம்பாத மோசமான காலகட்டத்தில் அந்தப் பிராணி தோன்றும் எனவும், அது வானிலிருந்து இறக்கப்படாது எனவும், இந்தப் பூமியிலேயே தோன்றும் எனவும், தஜ்ஜால் போன்று முன்பே படைக்கப்பட்டு அந்தப் பிராணி மறைத்து வைக்கப்படவில்லை. இனி மேல் தான் அது தோன்றவிருக்கிறது எனவும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
எத்தனையோ பிராணிகள் உலகில் உள்ளன. அவற்றிலிருந்து இந்தப் பிராணி வித்தியாசப்படுகின்றது. எந்தப் பிராணியும், மனிதர்களுடன் பேசுவதில்லை. இந்த அதிசயப் பிராணியோ மக்களிடம் பேசக் கூடியதாகப் படைக்கப்படும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து நாம் அறியமுடியும்.
பத்து அடையாளங்களில் ஒன்றாக இந்த அதிசயப்பிராணியும் உள்ளது என்ற ஹதீஸை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப் பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைத் தொடர்ந்து அடுத்ததும் தோன்றிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: முஸ்லிம் 5234
இவற்றைத் தவிர அப்பிராணி பற்றி மேலதிகமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை.
மனிதர்களின் கற்பனைக்கு எட்டக் கூடிய வடிவில் முன்பே மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற ஏதேனும் மிருகத்தின் வடிவில் அப்பிராணியின் வடிவம் அமைந்திருக்குமென்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கூறியிருப்பார்கள். மனி தர்கள் இது வரை கண்டிராத ஒரு வடிவில் அது அமைந்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க முடியும். அதன் வடிவம் தான் நமக்குக் கூறப்படவில்லையே தவிர அது வந்துவிட்டால் சட்டென்று கண்டு கொள்ளக்கூடிய முக்கியமான தன்மையை அல்லாஹ் கூறிவிட்டான்.
"மனிதர்களுடன் பேசக் கூடியதாக அப்பிராணி அமைந்திருக்கும்'' என்பதை விட எந்த அடையாளமும் தேவையில்லை. அப்படி ஒரு பிராணி தோன்றவிருக்கிறது என்று நம்புவதே நமக்குப் போதுமானதாகும் என்பதாலேயே அது பற்றி அதிக விபரம் நமக்குக் கூறப்படவில்லை.
நடக்க முடியாத விஷயத்தைக் குறித்து "சூரியன் மேற்கே உதித்தாலும் இது நடக்காது'' என்று கூறப்படுவதுண்டு. சூரியன் மேற்கே உதிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியதன்று என்றாலும் நடக்க முடியாத இதுவும் யுக முடிவு நாளின் நெருக்கத்தில் நடக்கவுள் ளது. உலகம் தோன்றியது முதல் கிழக்கில் உதித்து வரும் சூரியன் திடீரென மேற்கிலிருந்து உதிக்கும். இந்த நிலை ஏற்பட்ட பின் ஈமான் கொள்வதோ,பாவமன்னிப்புக் கேட்பதோ இறைவனால் ஏற்கப்படாது.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கை, பயனளிக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 4635, 4636, 6506, 7121
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதி விடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் இந்தப் பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியை திடீரென நிறுத்தி உடனே எதிர்த்திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.
நாற்பது மைல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்படுவது மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அப்படியானால் ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைத்துப் பார்த்திராத விதத்தில் இந்தப் பூமி குலுங்கும். கட்டிடங் கள் தகர்ந்து விழும். மலைகளும் கூட பெயர்த்து எறியப்படும். இவ்வளவு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்.
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162
உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்தப் பூகம்பங்கள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும்.
இம்மூன்று பூகம்பங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தனி அடையாளங்களாகக் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து இது வரை ஒன்பது அடையாளங்களை நாம் விளக்கியுள்ளோம்.
எமன் நாட்டில் மிகப் பெரும் நெருப்பு ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்க முடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரைக் காலி செய்து விட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள்.
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின் பால் விரட்டிச் செல்லும், அது வரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஓரளவு நாம் அறிந்து கொண்டோம்.
இந்தப் பத்து அடையாளங்கள் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல இறைவன் துணை செய்வானாக!