6 4 2022
உக்ரைனில் புச்சா தெருக்களில் பொதுமக்களின் சடலங்கள் ஆங்காங்கே கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி, சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐநாவில் பேசிய இந்தியா, இச்சம்பவத்திற்கு சந்தேகமின்றி கண்டனம் தெரிவிக்கிறோம். படுகொலை பற்றிய அறிக்கை ஆழ்ந்த கவலையளிக்கின்றன.இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என தெரிவித்தது.
பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக இந்தியா வெளியிட்ட வலுவான கண்டனம் இதுவாகும்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி ஜே பிளிங்கன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசினார். கடந்த ஒரு வாரத்திற்குள், இருவரும் இரண்டாவது முறையாக சந்தித்து பேசுகின்றனர். மேலும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான இந்திய-அமெரிக்க 2+2 சந்திப்புக்காக இவர்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் சந்திக்க உள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய ஐ.நா., கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்திர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலைகள் பற்றிய சமீபத்திய அறிக்கைகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இந்த கொலைகளை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
உக்ரைனின் நிலைமையில் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அத்துடன், மனிதாபிமான பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.
சர்வதேச சமூகம் தொடர்ந்து மனிதாபிமான தேவைகளுக்கு சாதகமாக பதிலளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்தியாவசிய நிவாரண பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கு பாதுகாப்பான பாதைக்கான உத்தரவாதங்களை வலியுறுத்தும் அழைப்புகளை நாங்கள் ஆதரிக்கிறோம்
உக்ரைனில் உள்ள “மோசமான மனிதாபிமான சூழ்நிலையை” கருத்தில் கொண்டு, இந்தியா உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. வரவிருக்கும் நாட்களில் உக்ரைனுக்கு இன்னும் அதிகமான மருத்துவப் பொருட்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மனிதாபிமான நடவடிக்கை, நடுநிலைமை, பாரபட்சமற்ற தன்மை, சுதந்திரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒருபோதும் அரசியலாக்கப்படக்கூடாது” என்றார்.
மேலும், போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான இந்தியாவின் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தை நடத்தும் பாதையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை தொடக்கத்தில் இருந்தே இந்தியா, இரண்டு நாடுகள் இடையே கூறிவருவதாக தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்த மற்றொரு அறிக்கையில் திருமூர்த்தி கூறியதாவது, “உலக ஒழுங்கு என்பது சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மாநிலங்களின் இறையாண்மைக்கான மரியாதை ஆகியவற்றால் தொகுக்கப்பட்டுள்ளது என்பதை ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
இந்தியாவின் உள்நாட்டு விலையில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாள்களில், இந்தியாவில் எரிபொருள் விலை 9.20 ரூபாய் உயர்ந்துள்ளது. போரின் தாக்கமானது, நாட்டிற்கு வெளியே உள்ள நாடுகளில் குறிப்பாக வளரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் மூலம் தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும், மோதலுக்கு முன்கூட்டிய தீர்வைக் காண ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவது நமது கூட்டு நலனில் உள்ளது” என்றார்.
கிவ்-க்கு வடக்கே உள்ள புச்சா நகரத்தில் நடந்த கொலைகளின் கிராஃபிக் படங்கள் சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஜெலன்ஸ்கி அதனை இனப்படுகொலை என அறிவித்துள்ளார். அவர் திங்கட்கிழமை புச்சா பகுதிக்கு சென்றுள்ளார். உக்ரைன் கூற்றுப்படி, ரஷ்ய ஆக்கிரமிப்பை தொடர்ந்து முதன்முறையாக கிவ்வை சுற்றியுள்ள மொத்த பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் கூறுகையில், “அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதல்கள். இதை போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இது பல தசாப்தங்களாக ஐரோப்பாவில் காணப்படாத பொதுமக்களுக்கு எதிரான மிருகத்தனம் என்றார்.
ஆனால், புச்சா குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த பேசிய ரஷ்யாவின் தூதர் வசிலி நெபென்சியா, புச்சாவில் நடந்திருப்பது கிவ் ஆட்சி மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்களின் தவறான தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலின் இலக்கு பயங்கரமானது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது நாஜி குற்றங்களின் கனவுகளை மீண்டும் கொண்டுவருகிறது என்றார்.
source https://tamil.indianexpress.com/international/ukraine-war-india-call-for-independent-probe-for-bucha-killings-436554/