புதன், 6 ஏப்ரல், 2022

டிராவல் வீடியோ பதிவிடுபவரா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு.. இதை படிங்க..

தமிழகத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. பொதுவாக நமக்கு ஊட்டி, கொடைக்கானல் அடிக்கடி கேள்விப்படும் பெயர்களாக இருக்கும். நாமும் கோடை விடுமுறையை கழிப்பதற்காக அங்கு சென்று திரும்பியிருப்போம்.

ஆனால், தமிழகத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை என பல இடங்கள் உள்ளன. இன்னமும் கூட தெரியாத இடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

சமூக வலைதளங்களின் வருகையால் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் வீடியோவையும் புகைப்படங்களையும் பதிவிடக் கூடிய சூழல் வந்துவிட்டதால் பயண விரும்பிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

தாங்கள் செல்லும் இடங்களையெல்லாம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூ-டியூப் என சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர்.

தமிழக சுற்றுலாத் துறை இப்படிப்பட்ட டிராவலர்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் அவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து அறியப்படாத சுற்றுலாத் தளங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தில் (செப்டம்பர் 27) இதுபோன்ற பயண ஆர்வலர்களுடன் தமிழ்நாட்டை கண்டறிவோம் என்ற பெயரில் ஒரு பிரசார நிகழ்ச்சியை தமிழக சுற்றுலா துறை முன்னெடுத்தது 

இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பயண ஆர்வலர்கள் பங்கேற்றனர். அவர்களுடைய வேலை அறியப்படாத சுற்றுலாப் பகுதிகளை கண்டறிந்து அவற்றை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பிரபலப்படுத்த வேண்டும் என்பது தான்.

ஜெர்மனியை சேர்ந்த பிரபல தம்பதியரும் தமிழக சுற்றுலாத் துறையுடன் கைகோர்த்துள்ளனர்.
கொரோவால் சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சுற்றுலாத் துறையின் முயற்சியால் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பயண வீடியோக்களை பதிவிடுபவராக நீங்கள் இருந்தால் தொடர்ந்து அந்தப் பணியைச் செய்யுங்கள். உங்களுக்கு இப்படியொரு வாய்ப்பு தமிழக சுற்றுலா துறையிடம் இருந்து வர வாய்ப்புள்ளது.

source https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-tourism-department-new-attempt-to-attract-traveler-in-india-436564/