சனி, 9 ஏப்ரல், 2022

ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டை உருவாக்காது –

 டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்காக நேரம்வந்துவிட்டது இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெவ்வேறு மொழிகள் பேசும் மாநில மக்கள், ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்ளும்போது அந்த உரையாடல் இந்திய மொழியில் இருக்க வேண்டும் அமைச்சரவையில் 70 சதவீத செயல்திட்டங்கள் இந்தி மொழியில் தான் தயார் செய்யப்படுகிறது. இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க இந்தி மொழி பயி்ற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

மேலும் 8 வடகிழக்கு மாநிலங்களில் 22 ஆசிரியர்கள் இந்தி மொழியை பயிற்றுவிக்க நியமிக்கப்படுவார்கள் என்றும், இந்த மாநிலங்களில் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாய பாடமாக அறிவிக்க மாநில அரசுகள் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷாவின் இந்த பேச்சு எதிர்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்தக்கு எதிரான பலரும் தங்களது கருத்தக்களை தெரிவித்து வருகின்றன.

தமிழக முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.

இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர்  அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

திமுக எம்பி.கனிமொழி

அமித்ஷா பேசியது தொடர்பான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக எம்பி கனிமொழி, இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

திருமாவளவன் எம்பி

இந்திய அலுவல் மொழிகள் 22. இந்தி அவற்றுள் ஒன்று. இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையை விட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன் நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாகவுள்ளனர். எனவேதான் அமித்ஷா இப்படி பேசிகிறார்.

அமித்ஷாவின் இந்தக் கருத்துப் புதியதல்ல. ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி. ஆங்கிலம் அந்நிய மொழி என்னும் வாதங்களை முன்வைத்து அப்பாவி மக்களை ஏய்க்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மக்கள் விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிருக்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-leaders-opinion-against-amit-shah-hindi-issue-in-tamil-438036/