வெள்ளி, 3 நவம்பர், 2023

இஸ்ரேல் – ஹமாஸ் போர்; காஸாவிலிருந்து 7,000 பேரை மீட்க தயாரான எகிப்து…

 

7,000 வெளிநாட்டினரை காஸாவிலிருந்து வரவேற்கத் தயாராகி வருவதாக எகிப்து தற்போது அறிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களுக்கு பின்னர் காசா – எகிப்து எல்லை – திறக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டினர், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதுடன் நிவாரண உதவிகளும் காசாவிற்குள் செல்கின்றன. கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய அதிரடி தாக்குதலை அடுத்து யுத்தம் வெடித்தது.

இதனால் காசா மீது இடைவிடாது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், எரிபொருள், குடிநீர், உணவு, மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை என எதுவும் காசா மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்தது. நிவாரண உதவிகளும் காசாவிற்குள் வராத வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில், 25 நாட்களுக்கு பிறகு காசா – எகிப்து இடையே உள்ள எல்லை திறக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் எல்லையில் குவிந்து படிப்படியாக வெளியேறி வருகின்றனர். காயமடைந்த பாலஸ்தீனியர்களும் காசாவில் இருந்து வெளியேறி எகிப்தில் சிகிச்சை பெற தொடங்கியுள்ளனர். நிவாரண பொருட்களும் காசாவிற்குள் கொண்டுசெல்லப்படுகின்றன. ஆனால் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யாததால் எல்லை திறக்கப்பட்டும் கத்தி மேல் நடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காஸாவிலிருந்து மேலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் எகிப்துக்குள் வியாழக்கிழமை அழைத்துவரப்பட்டனர். அன்று மட்டும் சுமார் 400 பேரை அனுமதிக்க எகிப்து அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதற்காக எகிப்தின் அவசரகால ஊர்திகள் ராஃபா எல்லைப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. அதன்படி ராஃபா எல்லையைக் கடந்து  சுமார் 400 பேர் வந்துள்ள நிலையில், மேலும் 7,000 வெளிநாட்டினரை காஸாவிலிருந்து வரவேற்கத் தயாராகி வருவதாக எகிப்து தற்போது அறிவித்துள்ளது.

source https://news7tamil.live/israel-hamas-war-egypt-ready-to-rescue-7000-people-from-gaza.html