திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே வியாழக்கிழமை (நவம்பர் 2) பட்டியல் இனச் சமூகத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிறுநீர் கழித்ததற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே மணிமூர்த்தீசுவரம் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன இளைஞர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தி, பணத்தை பறித்துக் கொண்டதோடு அவர்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட கொடூர சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளடு. இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னெப்போதும் இல்லாத வகையில், சாதியக் கொடுமைகள் நடைபெறுகிறது என்பதை இந்த சம்பவம் நிரூபிக்கிறது என்று சமூக வலைதளமான எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது , இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்த விடியா தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது,
இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பட்டியல் இனச் சமூகத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்துக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் எக்ஸ்-ல் பதிவிட்டிருப்பதாவது: “நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறது. அவர்கள் வைத்திருந்த பற்று அட்டையை பறித்து அதிலிருந்து ரூ.5000 பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர். பட்டியலின இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்தக் கொடுமை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இரு சக்கர ஊர்தியில் வந்த பட்டியலின இளைஞர்களை தடுத்து நிறுத்திய 6 பேர் கொண்ட கும்பல், முதலில் அவர்களின் சாதி குறித்து விசாரித்திருக்கிறது. அவர்கள் பட்டியலினத்தவர்கள் என்று தெரியவந்த பிறகே அவர்களை தாக்கி வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் இது சாதிய நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியாகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றாலும் கூட, இதன் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதை விசாரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பள்ளி ஒன்றில், பிற மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்ததற்காக சின்னதுரை என்ற மாணவரை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. அந்தக் கொடிய நிகழ்வு நடந்து இரு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அதே மாவட்டத்தில் மீண்டும் ஒரு கொடிய சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் இதுவரை எவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அரசுத் தரப்பில் செய்யப்படும் இத்தகைய தாமதங்கள் தான் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தத் துடிக்கும் சக்திகளுக்கு துணிவை வழங்குகிறது. எனவே, வேங்கைவயல் கொடுமை குறித்த வழக்கு உள்ளிட்ட பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதுடன், பட்டியலின மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக, “நெல்லை அருகே சாதிவெறியாட்டம்! சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியிருப்பதாவது: “நெல்லை மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
சாதிவெறி கொண்ட அந்தச் சமூகவிரோதக் கும்பல் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் அவ்விளைஞர்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து அலைபேசிகள், இருசக்கர வண்டி மற்றும் பணமெடுக்கும் ஏடிஎம் அட்டை போன்றவற்றைப் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆடையில்லாமலேயே அவர்கள் அங்கிருந்து தப்பித்து வீடுவந்து சேர்ந்துள்ளனர். அதன்பின்னரே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து காவல்துறையினர் சாதிவெறிக் கும்பலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்.
அதேவேளையில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருநெல்வேலி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் ஆகிய இரு பட்டியலின இளைஞர்களை அப்பகுதி வழியாக வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் பெய்து, தாக்கி, மிரட்டிப் பணம் மற்றும் கைபேசிகளைப் பறித்துச் சென்றதாக தகவல்கள் வருகின்றன.
இச்செயல் மன்னிக்கவே முடியாத கடும் கண்டனத்திற்கு உரியதாகும். குற்றவாளிகள் ஆறு பேரை காவல்துறை உடனடியாகக் கைது செய்துள்ளது. இக்குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறைக்கு உள்ளது. ஒரு சிலரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையே வளர்ந்து வரும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது.
மனிதநேயத்தையும், சமூக ஒற்றுமையையும் பேணிக் காக்க விரும்பும் ஒவ்வொருவரையும் இச்செயல் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதுபோன்ற சமூக விரோத சக்திகளின் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிந்து, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்திட தொடர்ந்து விழிப்பாக இருந்து கண்காணித்திட வேண்டுமென ம.தி.மு.க சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/attacks-on-sc-youths-in-thachanallur-tirunelveli-eps-vaiko-ramadoss-thirumavalavan-condemns-1682603