கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டு நெல்லையில் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நெல்லை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியில் தனியார் நிறுவன தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு நிலம், வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில், திருவனந்தபுரத்திலுள்ள மண்டல கேன்சர் மைய மருத்துவமனை முகவரியுடன் கூடிய மருத்துவக் கழிவுகள், ஊசிகள், உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வீட்டுக்கழிவு பொருட்கள் உள்ளிட்டவைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சுத்தமல்லி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தபட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். கேரளாவிலிருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டி எரிப்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மனோகர், பேட்டை பகுதியைச் சார்ந்த மாயாண்டி ஆகிய 2 பேரையும் சுத்தமல்லி போலீஸார் கைது செய்தனர்.
கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட தடய அறிவியல் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் மற்றும் திடக் கழிவுகளை கேரள அரசு 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று தென் மண்டல பசுமைத் தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/two-arrest-in-connection-with-medical-waste-dumping-from-kerala-in-tirunelveli-8532407