பழைய வாகனத்தை விற்பனை செய்தால் 18% ஜி.எஸ்.டி என்ற புதிய வரி விதிப்பு அவ்வளவு சுமையல்ல என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கத்தைப் பார்த்த பிறகு சிரிப்புதான் வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பழமொழி ஒன்றைக் கூறி கிண்டல் செய்துள்ளார்.
மேலும், “குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல, குழியும் பறித்ததாம்” என்ற பழமொழி என் நினைவுக்கு வந்தது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை விற்பனை செய்யும்போது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு முன்னர், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியைப் பொறுத்தவரை, பெட்ரோல் கார்களில், 1200 சிசி வரை என்ஜின் திறன் மற்றும் 4000 மிமீ வரை நீளமுடைய வாகனங்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த அளவை தாண்டும் வாகனங்களுக்கு 18% ஜி.எஸ்.டி என்று இருந்தது. டீசல் கார்களைப் பொறுத்தவரை 1500 சிசி வரையிலான என்ஜின் திறன் மற்றும் 4000 மிமீ வரை நீளமுடைய வாகனங்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த அளவை தாண்டும் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி என்று இருந்தது. மின்சார கார்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து வகையான பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனை வரி விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பழைய கார்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள 18% ஜி.எஸ்.டி வரி உயர்வு பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு மட்டுமே என்றும், தனிநபர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய கார்களை விற்பனை செய்ய 18% வரி என்பது வாகனத்தை விற்பனை செய்பவரின் மார்ஜின் தொகைக்கு மட்டுமே பொருந்தும். அதாவது ஒரு காரை வாங்கும் போது இருந்த விலைக்கும் விற்கும் போது இருக்கும் விலைக்கும் உள்ள வித்தியாச தொகைக்கு மட்டுமே வரி பொருந்தும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பழைய கார்கள் விற்பனை மீதான ஜி.எஸ்.டி வரியை 18% ஆக உயர்த்தப்பட்டதை முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஒரு பழமொழி கூறி தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பழைய வாகனத்தை விற்றால் 18% ஜி.எஸ்.டி என்ற புதிய வரி விதிப்பைப் பெரும்பான்மையான வாகன உரிமையாளர்கள் எதிர்க்கிறார்கள். அரசுக்கு எதிராக கோபம் வருகிறது. இந்த வரி அவ்வளவு சுமையல்ல என்று நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தைப் பார்த்த பிறகு அரசுக்கு எதிராகச் சிரிப்பு வருகிறது.
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தம்முடைய கணக்குப் பாடத்தை, பள்ளிக் கணக்குப் புத்தகங்களில் சேர்ப்பதற்கு முன்னால் விலக்கிக் கொள்வார் என்று நம்புகிறேன். 'குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல, குழியும் பறித்ததாம்' என்ற பழமொழி என் நினைவுக்கு வந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/18-per-cent-gst-on-selling-old-cars-nirmala-sitharamans-explanation-makes-me-laugh-p-chidambaram-criticize-8566169