சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 3 ஜீயர்களை அழைத்து பரிகாரம் செய்ததாக கூறி வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜனை புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மாநாட்டில், டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது சர்ச்சையானது. உதயநிதியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்பவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன், ஜோதிடர் கூறியதால் 2026 சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் 3 ஜீயர்களை அழைத்து பரிகாரம் செய்தார் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீஸ் வாகனத்தில் அமர்ந்து இருந்த ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது சென்னை காவல்துறையா? ஸ்ரீரங்கம் காவல்துறையா என்பது தெரியவில்லை. என்னை இப்போது கைது செய்வதாக கூறி வீட்டுக்கு வந்து அழைத்து செல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/srirangkam-rangarajan-arrest-for-controversy-video-release-on-udhayanidhi-stalin-meets-three-jeeyars-8442907