செவ்வாய், 17 டிசம்பர், 2024

குறைந்த மின் கட்டணம் தமிழ்நாட்டில்தான் - தமிழக அரசு பெருமிதம்

 

EB Bill, EB bill with GST amount, TANGEDCO officers explains, tamilnadu, eb meter, மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி, மின்சாரத் துறை விளக்கம், தமிழ்நாடு, மின் துறை, TANGEDCO, Tamilnadu EB, TNEB

இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழ்நாட்டில்தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழ்நாட்டில்தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் 2 இலட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் யூனிட்வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. என்றாலும், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் மற்ற மாநிலங்கள் போல் உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113ஆகும். இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது மும்பை 100 யூனிட்டுக்கு ரூ.643 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, டாடா நிர்வாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் ரூ.524, மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.488.

ராஜஸ்தான் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.833, மராட்டிய மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.668, உத்தரப் பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.693, பீகாரில் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.684, மேற்கு வங்கம் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.654, கர்நாடக மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.631, மத்தியப் பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, ஒரிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.426, சத்தீஸ்கர் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.431 வசூலிக்கப்படுகிறது.

இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது.இதனை தி.மு.க-வோ, தமிழ்நாடு அரசோ, குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சார கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து அரவிந்த் வாரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏழை, எளியோரின் நல வாழ்வில் செலுத்திவரும் அக்கறையும் கரிசனமும் வெள்ளிடை மலையாக விளங்குகிறது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-has-the-lowest-electricity-tariff-in-india-8445921