கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில், கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் மாணவர்களை தயார்படுத்துவது போன்றவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகளின் கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகள், இந்த கல்வி ஆண்டில் செய்யப்பட்ட சாதனைகள், திருச்சியில் நடைபெற உள்ள சாரண, சாரணியர் இயக்கத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, விழித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக உபகரணங்களை கண்டுபிடித்த கோவை மாவட்டம், அரசூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அமைச்சர் கௌரவப்படுத்தினார். அதேபோல், நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களையும் அமைச்சர் பாராட்டினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, "ஏற்கனவே உள்ள ஆய்வுக் கூடங்களை, நவீன மயமாக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுக் கூடங்களை அமைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது
மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சாதனை புரிவதற்கு காரணம் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதால் தான். பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா என்று ஆய்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிக் கல்வித் துறை வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடத்துகிறார்கள். அது பெரும்பாலும் தவறாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஒரே அரசு தமிழக அரசு தான். அனைத்து பள்ளிகளுக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டு வருகிறது" என தெரிவித்தார்.
செய்தி - பி.ரஹ்மான்
source https://tamil.indianexpress.com/education-jobs/minister-anbil-mahesh-about-artificial-intelligence-in-schools-8445827