தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் #Kanimozhi எம்.பி. ஆய்வு!
கனமழை காரணமாக தூத்துக்குடியில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் திமுக எம்.பி. கனிமொழி இன்று (டிச.15) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது எம்.பி. கனிமொழியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நிலவரத்தை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு குறித்து கனிமொழி எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“தூத்துக்குடியில் கனமழையால் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளை இன்று ஆய்வு செய்து, உடனடியாக அங்கு தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற அறிவுறுத்தியுள்ளேன். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்”
இவ்வாறு திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/kanimozhi-mp-in-rain-affected-areas-in-tuticorin-research.html