வெள்ளி, 13 டிசம்பர், 2024

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்களின் கேள்விகளும், கண்டனங்களும்!

 12 12 24

இன்றைய குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்பிக்கள் வைத்த கோரிக்கைகளையும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் தெரிவித்த கண்டனங்களையும் இங்கு பார்ப்போம்.

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை 2024 மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் கனிமொழி எம்பி பேசியதாவது;

நான் இந்த மசோதாவை எதிர்க்க விரும்புகிறேன். இந்த மசோதா இந்த அவைக்கு வரும் முன் சிந்தித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் பல்வேறு விஷயங்கள் விடுபட்டுள்ளன. இது நிவாரணம் தருவதைவிட அதிகமாக பாதிப்பையே தருகிறது. தொடர்ச்சியான பருவநிலை மாற்றம் இயற்கை பேரிடர்களை அதிகப்படுத்தியுள்ளது. உலகின் வெப்பநிலை அதிகமாகியுள்ளது. வெள்ளம், புயல், காட்டுத்தீ போன்ற பேரிடர்களால் உலகம் முழுவதும் மக்கள் அதிகளவில் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது நாம் பேரிடர் மேலாண்மையை தீவிர பிரச்னையாக பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்படும்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்குவதாக பெருமையாக கூறுகிறீர்கள். ஆனால் அந்த தொழில்நுட்பங்களை மத்திய அரசு சரியாக பயன்படுத்துவதில்லை. அவர்கள் வழங்கும் முன்னெச்சரிக்கை ஜோசியம் பார்ப்பது போல்தான் உள்ளது.

150 கி.மீ தொலைவில் புயல் வந்த பின்னால்தான் மத்திய அரசினால் எச்சரிக்கை வழங்க முடிகிறது. அதை வைத்து மக்களை உடனடியாக அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நேரம் போதுவதில்லை. மத்திய அரசின் ரேடார் அமைப்பை மேம்படுத்த வேண்டும். மற்ற நாடுகள் புயல் 300 கி.மீ தொலைவில் உருவாகும் போதே கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுகின்றனர். நாமும் அதேபோல் செய்தால்தான் மாநில அரசுகள் மக்களை உரிய நேரத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.

பிரதமர் தன்னை விஷ்வகுரு என்று அழைத்துக் கொள்கிறார். உலகுக்கே தாங்கள்தான் வழிகாட்டி என்று சொல்லிக் கொள்பவர்கள் செயற்கை நுண்ணறிவு, செயற்கைகோள் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டுகூட ஒரு பேரிடரை சரியாக கணிக்க முடியாதவர்களாக இருப்பதோடு ஏழை மக்கள், விவசாயிகள் அதிகமாக பேரிடர்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற கவலையும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

பெரும்பான்மையான தேசிய ஜனநாயக கூட்டணியின் மசோதாக்களை போலவே, இந்த மசோதாவும் மாநில உரிமைகளுக்கு எதிரானது. பேரிடர் மேலாண்மை மாநிலங்கள் செயல்படுத்துவது, ஆனால் மாநிலங்களின் ஆலோசனையை பெறாமலேயே மசோதா உருவாக்கப்பட்டிருப்பது பேரிடர் மேலாண்மையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மத்திய அரசு வெளியிடும் எச்சரிக்கை தகவல்கள் போதிய தரவுகளுடன் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மதகு, குளம் உடைப்பு ஏற்பட்டால் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் எனுமளவுக்கு தரவுகள் தெளிவாக இருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசு தரவு தளங்கள், மாநில அரசுகளால் அணுக இயலாததாக இருக்கின்றன. மத்திய அரசு மாநிலங்களுக்கு போதிய நிவாரண நிதியை வழங்குவதில்லை. மிக்ஜாம் புயலின் போது 37,902 கோடி ரூபாய் நிதியுதவி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டியிருந்தது. ஆனாலும் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. அதேபோல் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.

44 A பிரிவின்கீழ் மாநில பேரிடர் நடவடிக்கை அமைப்பை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதற்கு யார் நிதி வழங்குவார்கள் என குறிப்பிடவில்லை. அந்த பலுவும் மாநில அரசின்மீது விழும் என அச்சமாக இருக்கின்றது. ஆண்டுதோறும் வெப்பத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வெப்ப அலையை மாநில அளவிலான பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான்கு லட்சம் வரையில் மாநில அரசு வழங்குகிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாய் இருக்கும் இதைத்தான் நாங்கள் திராவிட மாடல் அரசு என்கிறோம்.

தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கக்கூடிய காரணத்தினாலும், மக்களை பற்றி கவலைப்படக்கூடிய காரணத்தினாலும் மத்திய அரசு எங்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மத்திய அரசு எங்களை பார்த்து இரண்டு கைகளையும் விரித்துவிட்டது. பக்கத்து மாநிலமான கேரளாவுக்கும் அதே நிலைமைதான். பல ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை இழந்து, குழந்தைகளோடு தெருவில் கண்ணீரோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் கல்நெஞ்சோடு நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல். இதற்கு விரைவிலேயே தக்க பாடம் சொல்லித் தரப்படும்” என தெரிவித்தார்.

கொள்ளையடிக்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

இன்று மக்களவையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது;

தென்காசியில் சில சிறு நிதி நிறுவனங்கள் (எம்.எப்.ஐக்கள்) மற்றும் தனியார் சுயஉதவி குழுக்கள் (எஸ்.எச்.ஜிக்கள்) மூலம் நடுத்தர மக்களை ஆபத்தான முறையில் சுரண்டுகின்றன. மேற்கண்ட இந்த நிறுவனங்கள் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதில்லை. மாறாக கடன் வழங்குவது என்ற கோணத்தில் கொள்ளையடிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. இது அந்த மக்களை ஆழ்ந்த துயரத்தில் தள்ளுகின்றது.

இதுபோன்ற பிரச்னைகளின் விளைவாக பாதிக்கப்படும் மக்கள், தங்களது குடும்பங்களை இடம்பெயர்த்துக் கொள்வது மட்டுமில்லாமல், சில நேரங்களில் நிதி நிறுவனங்களின் அழுத்தத்தால் தனிநபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் மிக சோகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பாக பாரம்பரியமாக பலருக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பீடி மற்றும் தீப்பெட்டித் தொழில்கள் கடுமையான சரிவைச் சந்திக்கும் பகுதிகளில், இந்த துயரம் என்பது மிகவும் கடுமையான ஒன்றாகும். தேவை குறைவாலும், அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளாலும் இந்தத் தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கண்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கும் பரிதாபமான கட்டாயத்தில் உள்ளனர்.

இதுபோன்ற கடன் சுழற்சி அந்த குடும்பங்கள் மீது கடுமையான சமூக மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடன் வழங்குபவர்களால் துன்புறுத்தல், பொது அவமானம் மற்றும் இடைவிடாத மீட்பு உத்திகள் ஆகியவை கடன் வாங்குபவர்களுக்கு தாங்க முடியாத மன உளைச்சலுக்கு வழிவகுக்கிறது. எனவே இந்த இக்கட்டான நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய அரசு உடனடியாக அவசரகால நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதில் முதலாவதாக உள்ளூர் மொழிகளில் வழங்கப்படும் தெளிவான மற்றும் அணுகக்கூடிய விதிமுறைகளுடன், கடன் வழங்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த எம்.எப்.ஐக்கள் மற்றும் எஸ்.ஹெச்.ஜி ஆகிய நிறுவனங்கள் கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

கூடுதலாக, வட்டி விகிதங்களில் வரம்புகள் மற்றும் சுரண்டல் நடைமுறைகளுக்கு கடுமையான அபராதங்களை மத்திய அரசு விதிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடன் வாங்குபவர்கள் தங்கள் உரிமைகளை நன்கு புரிந்து கொள்ள நிதி கல்வியறிவு பிரச்சாரங்கள் மூலம் அதிகாரம் பெறவும், உரிய சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” எனப் பேசினார்.

அணு மின்நிலைய ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடுக!

நாட்டின் அணு மின்நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்களை கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அணுமின் நிலையங்களை ஆய்வு செய்ய ஏதேனும் சோதனை மற்றும் கண்காணிப்பு அமைப்பு உள்ளதா?. அனைத்து அணுமின் நிலையங்களிலும் பணியாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட SoPகளை கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து விவரங்கள் என்ன, நடைமுறையிலுள்ள திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சாதகமான பணிச்சூழலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

source https://news7tamil.live/winter-session-of-parliament-questions-and-criticisms-from-dmk-mps-in-todays-meeting.html