ஞாயிறு, 29 டிசம்பர், 2024

பொங்கல் பரிசு அறிவித்த தமிழக அரசு; ஜனவரி 9 முதல் டோக்கன் விநியோகம்!

 

CM MK Stalin announce pongal gift of Rs 1000 to all family card holders in TN Tamil News

பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பான அறிவித்துள்ள தமிழக அரசு, வரும் ஜனவரி 9-ந் தேதி இதற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு முன்பே பரிசுத்தொகுப்பினை வழங்கும் வகையில், டோக்கனில் தேதி குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது,

ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் முதல் வாரம் பொங்கல் பண்டிகை தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் வரும் ஜனவரி 9-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக வழங்கப்படும் இந்த டோக்கனில் குடும்ப அட்டைதாரர்கள் எப்போது ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று நேரத்தை குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் நாளில், முற்பகலில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும், 2-வது நாளில் முற்பகலில் 200 பேருக்கும் பிற்பகலில் 200 பேருக்கும், டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அரசின் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ள வேண்டிய தேதியை அதில் குறிப்பிட வேண்டும் என்றும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள கடைகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும், ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் சேர்த்து ரூ1000 ரொக்கப்பரிசும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை ரொக்க பரிசு தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், பொங்கல் பரிசாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் ரொக்கப்பரிசு தொடர்பான அறிவிப்பு இல்லாத நிலையில், வரும் நாட்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-pongal-gift-announcement-update-in-tamil-8574053