இந்திய பெண்களில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதுடையவர்களில் ஏறத்தாழ 4.8 சதவீதம் பேர் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இதில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பல பெண்கள் தேவையற்ற கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு அரசு காப்பீடு திட்டங்களை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் தொழில்சார் ஆபத்துகள் மற்றும் சமூக பொருளாதார காரணிகளால் ஏற்படும் மருத்துவ வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. இதில் ஏராளமான பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மாதவிடாய் பிரச்சனைகள் உருவாவதை தெரிவிக்கின்றன.
கருப்பை நீக்கம் என்பது இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார கவலையாக மாறியுள்ளது. மருத்துவ சான்றுகள் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது, மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் கௌரவ் சுரேஷ் குனால் மற்றும் புது டெல்லியின் தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் மருத்துவர் சுதேஷ்னா ராய் ஆகியோரால் நடத்தப்பட்டது. இது 25 முதல் 49 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களிடையே கருப்பை நீக்கத்தின் பரவல் மற்றும் வடிவங்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆய்வில், விவசாயத் தொழிலாளர்கள் இடையே அதிகளவில் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை நடைபெறுவதாக கூறப்படுகிறது. கடுமையான வேலை மற்றும் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துதல் ஆகியவை இந்த பெண்களுக்கு அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு, கருப்பை கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாக கூறுகிறது.
பல விவசாயத் தொழிலாளர்கள் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சையை, தேவைகளை நிர்வகிப்பதற்கான ஒரு தீர்வாகக் கருதுகின்றனர் என குனால் தெரிவித்துள்ளார். தேவையற்ற அறுவை சிகிச்சைகளைக் குறைப்பதற்கு அதிக விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை தேவை என்பதை இது வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ காப்பீட்டை தவறாக பயன்படுத்துதல்:
மருத்துவ காப்பீடுகள் எடுத்துக் கொண்ட பெண்களில் 10 சதவீதம் பேர் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பீகார் மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளில் இவை அதிகமாக நடப்பதாக கூறப்படுகிறது.
புவியியல் ரீதியாக இந்த ஆய்வு குறிப்பிடத்தக்க பிராந்திய மாறுபாடுகளை வெளிப்படுத்தியது. தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் முறையே 12.6 சதவீதம் மற்றும் 11.1 சதவீதம் என்ற அளவில் கருப்பை அறுவை சிகிச்சையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது அசாமில் வெறும் 1.4 சதவீதம் மற்றும் மிசோரமில் 1.5 சதவீதம் ஆகும். இந்த அறுவை சிகிச்சைகளில் பெரும்பாலானவை, அதாவது 67.5 சதவீதம் தனியார் சுகாதார மையங்களில் செய்யப்படுகிறது. இது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் வணிகமயமாக்கல் பற்றிய கவலையை எழுப்புகிறது என மருத்துவர் ராய் குறிப்பிட்டார்,
கருப்பை நீக்க அறுவை சிகிச்சையில் சமூகப் பொருளாதார காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகர்ப்புற பெண்களை விட கிராமப் புறங்களில் உள்ள பெண்கள் இந்த செயல்முறைக்கு 30 சதவீதம் அதிகமாக உள்ளவதாக கண்டறியப்பட்டது. இதில், கல்வியறிவு ஒரு முக்கிய காரணியாக வெளிப்பட்டது. கல்வி அறிவு இல்லாத பெண்கள் மற்றும் ஆரம்பக் கல்வி மட்டுமே உள்ளவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்களை விட, வசதி வாய்ப்பு அதிகமாக இருக்கும் பெண்கள் இந்த அறுவை சிகிச்சையை அதிகமாக செய்வதாக கூறப்படுகிறது.
தொடர் பிரசவங்கள்:
கருப்பை நீக்கத்தில் வயதும் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. 40 முதல் 49 வயதான பெண்கள் அதிகளவில் இந்த அறுவை சிகிச்சையை செய்கின்றனர். மேலும், 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண்களும் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதேபோல், உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களும் சுமார் 9.2 சதவீதம் பேர் இந்த அறுவை சிகிச்சை செய்கின்றனர்.
கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கோள் காட்டப்பட்ட முதன்மையான காரணம், அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு ஆகும். இந்த வகையில் சுமார் 55.4 சதவீதம் அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. நீர்க்கட்டிகள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் 19.6 சதவீதம் இந்த அறுவை சிகிச்சை செய்கின்றனர். கருப்பை கோளாறுகள் உள்ளவர்கள் 13.9 சதவீதம் பேர் கருப்பை நீக்கம் செய்கின்றனர். புற்றுநோய் இருப்பவர்களும் கணிசமானோர் இந்த அறுவை சிகிச்சை செய்கின்றனர். மெனோபாஸ், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இருதய நோய் அபாயங்கள் போன்ற புரிதல் இல்லாமல் ஏராளமானோர் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை செய்வதாக தெரிய வருகிறது.
விழிப்புணர்வின் அவசியம்:
இதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தான் கருப்பை நீக்கம் குறித்து பெண்களுக்கு புரிதல் ஏற்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
source https://tamil.indianexpress.com/india/4-8-of-indian-women-undergo-hysterectomy-many-use-government-insurance-schemes-study-8575561