தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தமிழக அரசு சார்பில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப் பணம் வழங்கப்படும்.
இலவச வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் அரசால் வழங்கப்படும். இந்த நிலையில் அடுத்தாண்டு 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அரசு இன்னும் வெளியிடப் படவில்லை. இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.
முதல்வர் அறிவிப்பு வந்தவுடன் ஜன.11ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pongal-gift-hamper-commissioner-radhakrishnan-8549036